பழிக்குப் பழி: ‘வீரபாண்டியபுரம்' சினிமா விமர்சனம்


பழிக்குப் பழி: ‘வீரபாண்டியபுரம் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 22 Feb 2022 2:23 PM GMT (Updated: 22 Feb 2022 2:23 PM GMT)

இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் ரத்த மோதலில், ஜெய் எப்படித் தனக்கான பழிவாங்கலைச் சாதிக்கிறார் என்பதுதான் சுசீந்திரன் இயக்கியிருக்கும் 'வீரபாண்டியபுரம்'.

திண்டுக்கல் அருகில் உள்ள 2 கிராமங்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. அதில் வீரபாண்டியபுரம் என்ற கிராமமும் ஒன்று. இந்த ஊரை சேர்ந்த லோகிததாசின் மகள் மீனாட்சிக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜெய்க்கும் காதல் இருந்து வருகிறது.

ரகசிய திருமணம் வேண்டாம்...பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று ஜெய் விரும்புகிறார். இதில் மீனாட்சிக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஜெய் வற்புறுத்தலின் பேரில், சம்மதிக்கிறார். இதை மீனாட்சியின் தந்தை லோகிததாசிடம் கூறி, அவருடைய சம்மதத்தை பெற முயற்சிக்கிறார், ஜெய்.

ஜெயப்பிரகாசுக்கும், லோகிததாசுக்கும் தீராத பகை இருந்து வருவதால், இரண்டு பேரும் ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகிததாசையும், அவரது 2 தம்பிகளையும் கொல்ல ஜெய் வன்மத்துடன் காத்திருக்கிறார்.

இரண்டு பேரின் பகைக்கு காரணம் என்ன, இந்த பகை விலகியதா அல்லது குத்து வெட்டு கொலையில் முடிந்ததா? ஜெய்-மீனாட்சி திருமணம் நடந்ததா, இல்லையா? போன்ற கேள்வியுடன் இடைவேளை வருகிறது.

ஜெய் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையும் அமைத்து இருக்கிறார். அவருக்கு அடிதடி கதாபாத்திரம், புதுசு அல்ல. முன் பகையை கருவாக கொண்ட கதை என்பதால், அதிக ஆக்ரோசம் காட்ட வாய்ப்பு. அதை ஜெய் படம் முழுக்க பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மீனாட்சி, அகன்சா சிங் இருவரும் கதாநாயகிகளுக்கான வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக மட்டும் தெரிந்த பாலசரவணன், குணச்சித்ர நடிகராக உயர்ந்து இருக்கிறார். சரத் லோகிததாஸ், ஜெயப்பிரகாஷ், ஹரீஸ் உத்தமன் ஆகிய மூன்று வில்லன்களும், அவர்களின் வில்லத்தனமும் மிரட்டலாக அமைந்துள்ளன. கதையில் பெரிய திருப்பமான கதாபாத்திரத்தில், காளி வெங்கட் வருகிறார்.

பின்னணி இசையில், ஜெய் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார். காட்சிகளுக்கு வேகம் கூட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். சுசீந்திரன் டைரக்டு செய்து இருக்கிறார். முன்பகை உள்ள கிராமத்து கதைகளை நிறைய பார்த்து இருக்கிறோம். அதில் இருந்து இந்த கதை எந்த வகையிலும் மாறுபடவில்லை.

திரைக்கதையின் அதிவேகமும், அபாரமான விறுவிறுப்பும் படத்தின் சிறப்பு அம்சங்கள்.


Next Story