சந்தர்ப்ப சூழ்நிலை: ‘கள்ளன்' சினிமா விமர்சனம்


சந்தர்ப்ப சூழ்நிலை: ‘கள்ளன் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 24 March 2022 3:21 PM GMT (Updated: 24 March 2022 3:21 PM GMT)

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடர்களாக மாறும் இளைஞர்களையும், திருடிய பணத்தை வைத்துக்கொண்டு அவர்களால் நிம்மதியாக வாழ முடிந்ததா என்பதையும் கருவாக கொண்ட கதை.

காட்டுக்குள் போய் வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட வேல.ராமமூர்த்தி இறப்பதற்கு முன்பு மகன் கரு.பழனியப்பனிடம், ‘‘பணத்துக்காக வேட்டையாடாதே...பசிக்காக வேட்டையாடு...’’என்று கூறிவிட்டு உயிரை விடுகிறார். அப்பாவின் அறிவுரைப்படி கரு.பழனியப்பனும் வேட்டைக்கு போகும்போது, வனத்துறை அதிகாரியால் தடுத்து நிறுத்தப்படுகிறார். ‘‘இனிமேல் காட்டுக்குள் வந்தால் அவ்வளவுதான்...’’என்று எச்சரித்து அனுப்பப்படுகிறார்.

அதன் பிறகு கரு.பழனியப்பனின் வாழ்க்கை திசை மாறுகிறது. அவரும், நண்பர்களும் வீடு புகுந்து திருட ஆரம்பிக்கிறார்கள். முதல் திருட்டிலேயே ஒரு கொலை விழுகிறது. சின்ன சின்ன திருட்டுகளை நடத்தி வரும் அவர்கள், ஒரு ஒயின் ஷாப்பில் பெரிய தொகையை கொள்ளையடித்துவிட்டு, வாழ்க்கையை சுகபோகமாக அமைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.

அதன்படி, ஒயின் ஷாப்பில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் தப்பி ஓடுகிறார்கள். அந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர்களால் நிம்மதியாக வாழ முடிந்ததா என்பதே கதை.

கதையின் நாயகனாக டைரக்டர் கரு.பழனியப்பன் வருகிறார். கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகிறார். திருடப்போன இடத்தில் அவர் கதாநாயகி நிகிதாவை சந்திப்பதும், தன்னை தொடரும் நிகிதாவிடம், ‘‘நானே ஒரு திருடன். ஒரு கொலையும் செய்து இருக்கிறேன். என்னை தொடராதே’’ என்று புத்திமதி சொல்லும் இடத்திலும், பெண்ணாசை கொண்ட சக திருடனை ஒரே அடியில் சாகடிக்கும் காட்சியிலும் மிக இயல்பாக நடித்து இருக்கிறார். நிகிதாவும், நமோ நாராயணின் மனைவியாக வரும் இன்னொரு நாயகி மாயா சந்திரனும் அழகான தேர்வு. சவுந்தர் ராஜா, தினேஷ் சுப்புராயன், முருகன் அருண் பாண்டியா ஆகியோர் சக திருடர்களாக வருகிறார்கள்.

காடுகளின் அழகையும், ஆபத்துகளையும் அற்புதமாக படம்பிடித்து இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன். கதையை வேகமாக நகர்த்தி செல்வதில், ஒளிப்பதிவுக்கு நிறைய பங்கு. இசை: கே. பின்னணி இசை, கதையோடு இசைந்து இருக்கிறது. திருடும் காட்சிகளை இன்னும் கனமாக அமைத்திருக்கலாம்.

சந்திரா தங்கராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். கதையும், கதை சொல்லியிருக்கும் விதமும் படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறது. கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும், காட்சிகளை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருப்பதிலும், நேர்த்தி.

தமிழ் சினிமாவின் திறமையான டைரக்டர்கள் பட்டியலில் சந்திரா தங்கராஜ் இடம் பிடித்து இருக்கிறார். கதையுடன் நூறு சதவீதம் பொருந்தி இருக்கிறது, ‘டைட்டில்.’


Next Story