காமெடி திரைக்கதை: ‘பீஸ்ட்' சினிமா விமர்சனம்


காமெடி திரைக்கதை: ‘பீஸ்ட் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 17 April 2022 3:24 PM GMT (Updated: 2022-04-17T20:54:28+05:30)

தீவிரவாதிகள் தங்களின் தலைவரை விடுதலை செய்வதற்காக, பல்பொருள் விற்பனை கூடத்துக்குள் பொதுமக்களை பணய கைதிகளாக பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள் . அந்த விற்பனை கூடத்துக்குள் ராணுவ அதிகாரி ஒருவர் இருந்தால் அடுத்து என்ன நடக்கும், என்பதுதான் பீஸ்ட் படத்தின் ஒன்லைன்.

விஜய், இந்திய உளவு துறையின் அதிகாரி. தேசப்பற்றும், துணிச்சலும் மிகுந்த வீரர். ஒரு பல்பொருள் விற்பனை கூடத்துக்குள் பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு டெல்லி சிறையில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதியை தங்களிடம் ஒப்படைக்கும்படி, பேரம் பேசுகிறார்கள்.

விஜய் தைரியமாக அந்த பல்பொருள் விற்பனை கூடத்துக்குள் புகுந்து தீவிரவாதிகளிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றுகிறார்.

கதை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆரம்பிக்கிறது. பலூன் உடைந்து போனதால் அழுது கொண்டிருக்கும் குழந்தைக்கு விஜய் இரட்டை பலூன்களை வாங்கிக்கொடுத்து சிரிக்க வைக்கிறார். அதே குழந்தையின் சாவுக்கு காரணமாகிவிட்டதை நினைத்து கலங்கும் காட்சியில் இருந்து விஜய்யின் எல்லை தொடங்குகிறது.

மெலிதான சின்ன தாடி, அதில் வெள்ளிக்கம்பிகள் போல் நரை விழுந்த புதிய தோற்றத்தில், விஜய் ஸ்டைலாக தெரிகிறார். அவருக்கும், பூஜா ஹெக்டேவுக்குமான காதல் காட்சிகளில், இரண்டு பேருமே வசீகரிக்கிறார்கள். சண்டை காட்சிகளில் விஜய்யின் வேகமும், புதிய தொழில்நுட்பமும் சேர்ந்து நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

இரண்டு மூன்று இடங்களில் பஞ்ச் வசனங்கள், ரசிக்க வைக்கின்றன. ‘‘நான் முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’’ என்ற பஞ்ச் வசனத்தை விஜய் மறுபடியும் பேசியிருக்கிறார்.

பூஜா ஹெக்டேவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும், படம் முழுக்க வருகிறார். வி.டி.வி.கணேசின் நகைச்சுவை காட்சிகள், தியேட்டரை ஆரவாரமாக வைத்திருக்கின்றன. தீவிரவாதிகளுக்கும், பணய கைதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் நடுவராக செல்வராகவன். இனி, முழு நேர நடிகர் ஆகிவிடுவார்.

‘அனிருத் இசையில்’ என்று டைட்டிலில் தனி கார்டு போடுகிறார்கள்.

அதற்கு பாடல்களில் நியாயம் சேர்த்திருக்கும் அனிருத், பின்னணி இசையில், பின்தங்கிவிட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான இசை.

‘கோல மாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இதற்கு முன்பு இதே பாணியில் ஒரு சில படங்கள் வந்திருந்தாலும், அந்த வாசனை இல்லாதபடி, கவனமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் நெல்சன்.

‘கிளைமாக்ஸ்’ காட்சியில், பாகிஸ்தான் எல்லைக்குள் விஜய் விமானத்தில் பறப்பது, மிகையான கற்பனை.


Next Story