எதிரிகளை துவம்சம் செய்யும் ராக்கி: ‘கே.ஜி.எப்-2' சினிமா விமர்சனம்


எதிரிகளை துவம்சம் செய்யும் ராக்கி: ‘கே.ஜி.எப்-2 சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 18 April 2022 2:47 PM GMT (Updated: 18 April 2022 2:47 PM GMT)

‘கே.ஜி.எஃப்’ சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் ராக்கி, கருடனின் சகாக்களுக்கு எதிரியாகிறான். இறுதியில் ராக்கி தனது அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினானா, இல்லையா, அவனது நிலை என்ன ஆனது என்பதை சொல்கிறது இரண்டாம் பாகத்தின் கதை.

சின்ன வயதில் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற ‘கே.ஜி.எப்.’ என்ற தங்க வயல் கோட்டையை கைப்பற்றி ஆண்டு வருகிறார், யாஷ். இவரை அழித்து ஒழித்துவிட்டு ‘கே.ஜி.எப்.’ கோட்டையை அபகரிக்க துடிக்கிறார், சஞ்சய்தத். இருவருக்கும் இடையே உச்சக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது-யாஷ் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல், அவரை பிடித்து வர போலீஸ் மற்றும் எல்லை காவல் படைகளை அனுப்புகிறார், பிரதமர். ‘கே.ஜி.எப்.’பை கைப்பற்ற துடிக்கும் சஞ்சய்தத் ஒரு பக்கம். அதை அடியோடு அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதமரின் எதிர்ப்பு இன்னொரு பக்கம். இரண்டு பேரின் படைகளையும் யாஷ் சமாளித்தாரா, வெற்றி யாருக்கு? என்பது உச்சக்கட்ட காட்சி.

6 அடி உயரத்தில், கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கம்பீரமான தோற்றம் கொண்ட யாஷ், சண்டை காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டாமல், இது ஒரு அதிரடி படம் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் கதாநாயகனுக்கு அடுத்தபடியாக மிரள வைப்பவர், சஞ்சய்தத். தலை முதல் பாதம் வரை பச்சை குத்திக்கொண்டு வெறிபிடித்த அரக்கனைப்போல், ‘அதிரா’ கதாபாத்திரத்தில், மிரட்டியிருக்கிறார். கதாநாயகி ஸ்ரீநிதி, அவ்வப்போது திரையில் தோன்றி, கடைசியில் அனுதாபப்பட வைக்கிறார்.

பிரதமர் வேடத்தில், ரவீனா தண்டன். இவருடைய கம்பீரம், ஆச்சரியப்பட வைக்கிறது.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் இசையும் படத்தை தூக்கி நிறுத்தும் முக்கிய அம்சங்கள். டைரக்டு செய்திருப்பவர், பிரசாந்த் நீல். வேகமும், விறுவிறுப்பாகவும் நகர்ந்து செல்லும் திரைக்கதை, பார்வையாளர்களை திருப்தி அடைய செய்கிறது.

படத்தில், ரத்த சேதாரம் அதிகம். வாள் வீச்சும், கத்திகளின் உரசல் சத்தமும் சண்டை பிரியர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


Next Story