தலைமுறை மனிதர்களின் உணர்வுகள்: ‘கதிர்' சினிமா விமர்சனம்


தலைமுறை மனிதர்களின் உணர்வுகள்: ‘கதிர் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 2 May 2022 12:22 PM GMT (Updated: 2 May 2022 12:22 PM GMT)

‘நாம வாழறது முக்கியமில்ல. யாருக்காக வாழறோம், எப்படி வாழறோம் என்பதுதான் முக்கியம்’ என்கிற ஒரு வரியை, இருவேறு தலைமுறை மனிதர்களின் உணர்வுகள் வழியாக, ஆர்ப்பாட்டமின்றி, அதேநேரம் அழுத்தமான சம்பவங்களுடன் சித்தரிக்கிறது திரைக்கதை.

கதை ஒரு சின்ன கிராமத்தில் ஆரம்பிக்கிறது. காட்டுப்பாதையில் வந்து கொண்டிருக்கும் ஒரு போலீஸ் ஜீப் திடீரென்று நிற்கிறது. அங்கே ‘என்கவுன்ட்டர்’ நடக்கிறது. அடுத்த காட்சி, ஊருக்குள் நிகழ்கிறது. கதாநாயகன் கதிர் வேலை எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றுகிறார். அவர் ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அதில் இருந்து மீள்வதற்காக சென்னைக்கு வருகிறார். நண்பரின் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை தேடுகிறார். அவருக்கும், அந்த வீட்டின் உரிமையாளரான வயதான பாட்டிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. பாட்டியை சந்தித்தபின், கதிர் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது. 

‘‘வாழ்க்கை, யாருக்காக வாழ்ந்தோம் என்ற அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்’’ என்ற பாட்டியின் அறிவுரையை கேட்டு கதிர் வித்தியாசமாக சிந்திக்கிறார். விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் புதுமையான முறையில், ஆன்லைனில் வர்த்தகம் செய்கிறார். அதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. கதிர் வாழ்க்கையே மாறிப்போகிறது.

இந்த ஜீவனுள்ள கதைக்குள் கதிரின் கல்லூரி கால காதலை புகுத்தி, சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள்.

கதிர் கதாபாத்திரத்தில் புதுமுகம் வெங்கடேஷ் நடித்து இருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்றால் நம்பமுடியவில்லை. காதலையும், மோதலையும் கச்சிதமாக காட்டியிருக்கிறார். கதாநாயகி பவ்யா. பெயரைப் போலவே மென்மையான முகம். புரட்சிக்காரராக வரும் சந்தோஷ் பிரதாப், ‘பிளாஷ்பேக்’ காட்சியில் ஆஜராகி, அனுதாபத்தை அள்ளுகிறார். பாட்டியாக வரும் ரஜினி சாண்டி, பொருத்தமான தேர்வு.

ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவும், பிரசாந்த் பிள்ளையின் இசையும் கவனம் ஈர்க்கின்றன. தினேஷ் பழனிவேல் டைரக்டு செய்து இருக்கிறார். பார்த்து பழகிய காட்சியுடன் கதை மெதுவாக தொடங்கி, மிதமான வேகம் பிடித்து, போகப்போக அதனுடன் ஒன்ற வைக்கிறது. ‘பிளாஷ்பேக்’ காட்சி மந்தமாக நகர்கிறது.

காதலும், மோதலுமாக படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக விரைந்து செல்கிறது. இரண்டாவது பாதி, வித்தியாசமான சிந்தனை. ஆரம்ப காட்சியில் போடப்பட்ட புதிர் முடிச்சு, கடைசி காட்சியில் அவிழ்க்கப்படும் விதம், சிறப்பு.


Next Story