காமெடி கலாட்டா: ‘ஹாஸ்டல் ' சினிமா விமர்சனம்


காமெடி கலாட்டா: ‘ஹாஸ்டல்  சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 2 May 2022 2:41 PM GMT (Updated: 2 May 2022 2:41 PM GMT)

கல்லூரி விடுதியில் நடக்கும் மாணவர்களின் காமெடி கலாட்டா. படம் பார்க்க வரும் ரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுத்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் அதில் வெற்றி அடைந்துள்ளார்.

படம் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். கதை முழுவதும் ஒரு விடுதிக்குள் நடக்கிறது. அந்த விடுதியின் கண்டிப்பான வார்டன், நாசர். மேற்பார்வையாளர், முனிஷ்காந்த். விடுதியில் தங்கியிருக்கும் பிரம்மச்சாரிகள்: அசோக்செல்வன், சதீஷ் மற்றும் சிலர்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் ரவிமரியாவிடம் அசோக்செல்வனின் நண்பர் கடன் வாங்குகிறார். அதற்கு ஜாமீன் கையெழுத்து போடுகிறார், அசோக்செல்வன். கடன் வாங்கியவர் அதை திருப்பிக் கொடுக்காததால், ஜாமீன் கையெழுத்துப் போட்ட அசோக்செல்வனிடம் பணம் கேட்கிறார், ரவிமரியா.

இந்த நிலையில், ‘‘உங்கள் விடுதியில் ஒருநாள் என்னை தங்க வைத்தால் உனக்கு பணம் கொடுத்து உதவுகிறேன்’’ என்று கதாநாயகி பிரியா பவானி சங்கர் கூறுகிறார். அவருடைய நிபந்தனையை அசோக்செல்வன் ஏற்றுக்கொண்டு விடுதியில் தன் அறையில் பிரியா பவானி சங்கரை ரகசியமாக தங்க வைக்கிறார்.

பிரம்மச்சாரிகள் தங்கியிருக்கும் அந்த விடுதிக்குள் ஒரு பெண் நுழைந்து விட்டாள்’’ என்று புகார் வர விடுதி பரபரப்பாகிறது. வார்டன் நாசர் கோபத்தின் உச்சத்துக்கு போகிறார். ரகசியமாக விடுதிக்குள் போன பிரியா பவானி சங்கர் என்ன ஆகிறார்? அவர் திரும்பி வந்தாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில், உச்சக்கட்ட காட்சியில் இருக்கிறது.

அசோக்செல்வன் சராசரி இளைஞராக நண்பர்களுடன் சேர்ந்து ‘தண்ணி’ அடிக்கிறார். பிரியா பவானி சங்கரை ஒவ்வொரு அறைக்குள்ளும் மறைத்து வைப்பதோடு இவருடைய கடமை முடிந்து போகிறது. விடுதிக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும், அசோக்செல்வன் கோஷ்டியுடன் சண்டை போடும் காட்சிகளிலும் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்.

நாசருக்கு கண்டிப்பான கதாபாத்திரம் என்றாலும், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சதீஷ் சக நடிகர்களுடன் சேர்ந்து ‘காமெடி’ பண்ணுகிறார். இவர்கள் அத்தனை பேரையும் ஓரம்கட்டி, படம் முழுக்க சிரிக்க வைக்கிறார்கள் ரவிமரியாவும், முனீஷ்காந்தும்.

கலைராணி ‘‘வந்துட்டியா...?’’ என்று திகிலுடன் அடிக்கடி கேட்பதும், அதற்கு விளக்கமாக அவர் சொல்லும் பேய் கதையும், சிலிர்க்கிறது. அந்த பேய் விடுதிக்குள் நுழைந்து அத்தனை பேரையும் அடித்து நொறுக்குவது, இதற்கு முன் வந்த பேய் படங்களை நினைவூட்டுகிறது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில், டைரக்டர் சுமந்த் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இருக்கிறார்.


Next Story