குழந்தைகளின் மனிதநேய உறவு: ‘அக்கா குருவி ' சினிமா விமர்சனம்


குழந்தைகளின் மனிதநேய உறவு: ‘அக்கா குருவி  சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 5 May 2022 10:05 AM GMT (Updated: 2022-05-05T15:35:44+05:30)

‘அக்கா குருவி’க்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது கதையோடு பொருந்திப்போவதால் இந்த தலைப்பு வைத்திருப்பார்கள் போலும். ‘சில்ரன் ஆப் த ஹெவன்’ என்ற ஈரானிய படத்தின் மறுவடிவம்.

சிறுவன்-சிறுமியாக இருக்கும் அண்ணன்-தங்கை. அவர்களின் ஏழை தந்தை, நோயாளி தாய், ஒரு இளம் காதல் ஜோடி... இவர்கள்தான் படத்தின் கதாபாத்திரங்கள்.

இந்த ஆறு பேர்களை வைத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சாமி. ஒரே ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள்.

சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ‘ஷூ’வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சமாளிக்கிறார்கள்.

சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்த்து வரும் தேவா, தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி கொடுப்பதற்காக அந்த உண்டியலை உடைக்கிறான். அவன் தங்கைக்கு புது ‘ஷூ’ வாங்கிக் கொடுத்தானா, இல்லையா? என்பது ‘மெயின்’ கதை. இந்த கதைக்குள் ஹரிஸ்-மீனாட்சி ஜோடியின் காதலை செருகி இருக்கிறார்கள்.

தேவாவாக மாஸ்டர் மஹீன், தங்கையாக பேபி திவ்யா நடித்து இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, பாசமுள்ள அண்ணன்-தங்கையாகவே கவனம் ஈர்க்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இருவரும் நடித்தது போல் தெரியவில்லை. இவர்களின் தந்தையாக வி.எஸ்.குமாருக்கு இது முதல் படம் என்பது திரையில் தெரிகிறது.

இந்த மூன்று பேர்களின் கதையை மட்டும் சொன்னால், ‘ஒரு அப்பாவும், இரண்டு குழந்தைகளும்’ என்று படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போயிருக்கும்.

மீனாட்சியை இளையராஜாவின் ரசிகையாக காட்டியிருப்பதும், அதை தெரிந்து கொண்டு காதலர் ஹரிஸ் இளையராஜாவின் பழைய பாடல்களை தனது காரில் ஒலிக்க செய்வதும், கதைக்கு கவிநயம் கூட்டுகிறது. தேவாவும், அவனுடைய தந்தையும் நகரத்துக்கு வந்து தோட்ட வேலை தேடுவது, தேவையில்லாத காட்சி.

பின்னணி இசை மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார், இசையமைப்பாளர் இளையராஜா. உத்பல் வி.நாயனாரின் ஒளிப்பதிவில், கொடைக்கானல் ஜில்லிப்பு.

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமியிடம் இருந்து இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். குழந்தைகளுக்கு கோடை கால விருந்து.


Next Story