டெய்லரிங் தெரிந்தால் போதும், 7 தொழில்களை ஆரம்பிக்கலாம்


டெய்லரிங் தெரிந்தால் போதும், 7 தொழில்களை ஆரம்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 Jan 2022 11:00 AM IST (Updated: 29 Jan 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் விருப்பப்பட்டியலில் இந்த எம்பிராய்டரிக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. சமூக வலைத்தளங்களில் இலவசமாகவே இதற்கான பயிற்சிகள் உள்ளன. அதனை முறையாக பயின்று ஆரம்பித்தாலே, அதிக வாடிக்கையாளர்களை கவரலாம்.

சுயமாக சம்பாதிக்க விரும்பும் இல்லத்தரசிகள், தாங்கள் இருந்த இடத்திலேயே குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். இதற்கு முதலீடாக ஒரு தையல் இயந்திரம் இருந்தாலே போதுமானது. இதில் துணி தைப்பது மட்டுமன்றி, வேறு வகையான சிறு தொழில்களையும் தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்து  லாபம் ஈட்டலாம்.

மாஸ்க் தயாரிப்பு
இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்வில் முகக் கவசம் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்டது.  அது தைப்பதும் மிகவும் சுலபம் என்பதால், இந்தத் தொழிலை எளிதாக ஆரம்பிக்கலாம். முகக் கவசம் தயாரித்து அருகிலுள்ள துணிக்கடைகளிலும், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விற்பனை  செய்யலாம்.

டிரஸ் ஆல்ட்ரேஷன்
சட்டை, பேண்ட் போன்ற உடைகளை சிறிதாகவோ, பெரிதாகவோ மாற்றும் ஆல்ட்ரேஷன் பணிக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் அதிகம். அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எளிமையான தொழில் இது. ஒரு சிறிய தையல் இயந்திரம் இருந்தாலே இதற்குப்  போதுமானது. அதிக முதலீடில்லாத தொழில் இது.  சாதாரண டெய்லரிங் தெரிந்தவர்கள் கூட ஆல்ட்ரேஷன் பணியை தொடங்கலாம். உங்கள் வாடிக்கையாளரின் உடல் அளவுகளுக்கேற்ப அவர்களின் துணி அளவுகளில் சற்று மாற்றம் செய்தாலே போதுமானது.

எம்பிராய்டரி
பெண்களின் விருப்பப்பட்டியலில் இந்த எம்பிராய்டரிக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. சமூக வலைத்தளங்களில் இலவசமாகவே இதற்கான பயிற்சிகள் உள்ளன. அதனை முறையாக பயின்று ஆரம்பித்தாலே, அதிக வாடிக்கையாளர்களை கவரலாம்.

தையல் வகுப்பு
நீங்கள், தையலில் நன்கு தேர்ச்சிப் பெற்றவராக இருந்தால், அதனை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் அவர்கள் பயன் அடைவது மட்டுமின்றி, நீங்களும் சம்பாதிக்கலாம். பலர் இன்று இதற்கான பயிற்சி பெற ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கென வீட்டில் தனி இடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் கூட இதற்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கலாம்.

ஹேண்ட் பேக்
ஹேண்ட் பேக்குகளுக்கு எப்பொழுதும் பெண்களின் மத்தியில் மவுசு அதிகம்.  அதிலும் ஆடைக்கு ஏற்றார் போல ஹேண்ட் பேக் அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெண்களை கவரும் விதத்தில் வித விதமான டிசைன்களில், மணிகள் போன்ற அலங்காரப் பொருட்களை பயன்படுத்தி, பல வண்ணங்களில், ஹேண்ட் பேக்குகளை தயாரித்து விற்பனை செய்யலாம்.

மேட்சிங் வேர்
‘மேட்சிங் வேர்’ இப்பொழுது டிரெண்டில் இருக்கும் தொழில். மேட்சிங் வேர் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே விதமான நிறத்திலும், அவரவர் ரசனைக்கேற்ப வெவ்வேறு டிசைன்களிலும் ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கும் தொழிலாகும். இது அதிக வருமானம் தரக்கூடிய, அதே நேரம்  வாடிக்கையாளரையும், உங்களையும் திருப்தியடையச் செய்யும் தொழிலாகும்.  

திருமண உடைகள்
வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடிய அழகிய நிகழ்வு என்பதால், திருமணத்திற்கென்று தயாராகும் ஆடைகளை தாங்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்துக்கொள்ள இன்று பலர் விரும்புகின்றனர். அவர்களின் கனவு ஆடைக்கு வடிவம் கொடுக்கும் சிறந்த தொழில்தான், இந்த திருமண உடைகள் தயாரிக்கும் தொழில். மணமக்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை தயாரித்து கொடுத்து லாபமும் ஈட்டலாம். 

Next Story