கவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்!
கவரிங் நகைகள் எளிதில் கறுத்துப் போகும் தன்மை கொண்டவை. சில பாதுகாப்பு விஷயங்களைப் பின்பற்றினால், அவற்றை எப்போதும் புதிதுபோல வைத்திருக்கலாம்.
பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் கருதி பெரும்பாலான பெண்கள் கவரிங் நகைகளை விரும்பி அணிகின்றனர். தங்க நகைகளுக்கு இணையாக, பலவித டிசைன்களில் அணிவகுத்து நிற்கின்றன கவரிங் நகைகள்.
கவரிங் நகைகள் எளிதில் கறுத்துப் போகும் தன்மை கொண்டவை. சில பாதுகாப்பு விஷயங்களைப் பின்பற்றினால், அவற்றை எப்போதும் புதிதுபோல வைத்திருக்கலாம். அதற்கான சில டிப்ஸ்:
* பத்திரப்படுத்துதல்:
கவரிங் நகைகளை, மற்ற நகைகளுடன் சேர்க்காமல் தனியாக வைத்திருக்க வேண்டும்.
புதிய நகைகளை வாங்கியவுடன், நிறமற்ற நகப் பூச்சை அவற்றின் மீது தடவி வைத்தால், எப்போதும் மங்காமல் மினுமினுப்பாக இருக்கும். கவரிங் நகைகளுக்கு அடிக்கடி ‘பாலிஷ்’ போடக்கூடாது.
நகைகளை அணிந்த பின்பு, கழற்றி வைக்கும்போது, பருத்தித் துணியால் நன்கு துடைத்துவிட்டு, வெல்வெட் துணியால் ஆன பைகளில் போட்டு வைக்கலாம். கம்மல், செயின், வளையல் என அனைத்து நகைகளையும் தனித்தனியாக வைக்க வேண்டும். கற்கள் பதித்த நகைகளையும் தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.
* சுத்தம் செய்தல்:
கவரிங் நகைகளை சுத்தம் செய்யும்போது, வெதுவெதுப்பான நீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். உப்பு தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. மிருதுவான ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும். அதிக நேரம் நீரில் ஊற வைக்காமல், பல் துலக்கும் பிரஷ் கொண்டு மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
கற்கள் பதித்த நகைகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி சுத்தம் செய்யும்போது, கற்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இது போன்ற நகைகளைப் பருத்தித் துணியால் துடைத்து வைக்க வேண்டும்.
* அணியும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சிகை அலங்காரம், உடை அலங்காரம் என அனைத்தையும் முடித்தபின்பு, இறுதியாக நகைகளை அணிய வேண்டும். வாசனைத் திரவியங்கள் கவரிங் நகைகள் மீது படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நகைகளைக் கழற்றி வைத்தபின்னரே உடை மாற்றுதல், சிகை அலங்காரத்தை அவிழ்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
* தினசரி பயன்பாட்டின் போது கவனிக்க வேண்டியது:
வீட்டில் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், சமையல், தோட்ட வேலைகளின் போது மறக்காமல் கவரிங் நகைகளைக் கழற்றி வைத்தால் சேதம் அடையாமல் காக்க முடியும். இவை கவரிங் நகைகளுக்கு மட்டுமின்றி, மற்ற வகை நகைகளுக்கும் பொருந்தும்.
Related Tags :
Next Story