இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 16 May 2022 5:30 AM GMT (Updated: 14 May 2022 12:15 PM GMT)

வாழ்க்கையில் எந்த நேரமும் பயம், படபடப்பு போன்ற உணர்வுகள் இருக்கிறது. இவற்றில் இருந்து மீள வழி வழிகாட்டுங்கள்.

னக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ, வங்கி சேமிப்போ இல்லை. வயதாகிவிட்டது. எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் மனதை பாடாய்ப்படுத்துகிறது. இரவில் தூக்கம் வருவதில்லை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுகிறது. யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. தனிமையில் இருக்கவே பிடிக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் வருகிறது. வாழ்க்கையில் எந்த நேரமும் பயம், படபடப்பு போன்ற உணர்வுகள் இருக்கிறது. இவற்றில் இருந்து மீள வழிகாட்டுங்கள்.

நீங்கள் உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை. என்றாலும் நீங்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் உடலியல் அல்லது உளவியல் காரணங்களால் இருக்கலாம். நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய நிலையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் போன்ற ஹார்மோன்கள் தொடர்பான பாதிப்புகள் இருந்தாலோ, இதுபோன்ற மனநிலையை சந்திக்க நேரிடும். எனவே மருத்துவரை சந்தித்து இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவும். சோதனைகளின் முடிவுகள் இயல்பானதாக இருந்தால் உங்கள் பிரச்சினை உளவியல் சார்ந்தது ஆகும்.

வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவர மற்றவர்கள் மீது கவனம் செலுத்துவது உதவாது. நேர்மறை எண்ணங்கள், நேர்மறை உணர்வுகள் மூலம் உங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பார்க்கவும். வாழ்க்கையில் அமைதியைக் காண சிறியதாக இருந்தாலும், என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை யோசிக்கவும். உங்களிடம் உள்ள குறைந்த பட்ச நிதியை கொண்டு வாழ்க்கையை எவ்வாறு திட்டமிடலாம் அல்லது உங்கள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு பணியில் உங்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பதைப் பார்க்கவும். உங்களது தற்போதைய சூழ்நிலையில் இருந்து உங்களை எவ்வாறு மீட்பது என்று பாருங்கள்.



நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. சிறிய வகுப்புகளில் படிக்கும் பொழுது நன்றாக படிப்பேன். எனது வேலையை சிறப்பாக செய்து முடிப்பேன். தற்போது என்னால் அந்த அளவிற்கு படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அடிக்கடி தூக்கம் வருகிறது. தலைவலி வருகிறது. எனக்கு பிடித்தமான பாடங்களைப் படிப்பதற்கு கூட கடினமாக உள்ளது. அதனால் மதிப்பெண்களும் குறையத் தொடங்கிவிட்டன. பொதுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருப்பதால், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறேன். எனது மனம் தெளியும் வகையில் வழிகாட்டுங்கள்.

பள்ளியின் கடைசி ஆண்டு என்பதால், 12-ம் வகுப்பில் நீங்கள் காட்டும் செயல்திறன் மட்டுமே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்ற நம்பிக்கை, தற்போது அனைவரின் மனதிலும் வேரூன்றி விட்டது. இந்த நம்பிக்கை சிறு வயதில்இருந்தே நமக்குள் வலுவாக புகுத்தப்பட்டதால், நாம் கற்றுக் கொள்வதை ரசிக்காமல், அழுத்தத்தின் கீழ் கற்க ஆரம்பிக்கிறோம்.

இவ்வாறு உடலும், மனமும் அழுத்தத்தை உணரும் போது, அவை தூக்கம் அல்லது கவனத்தை சிதறடிப்பது அல்லது கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற சில வழிகளில் அந்த அழுத்தத்தை வெளிப்
படுத்துகின்றன.

போதிய இடைவெளிகளுடன் படிக்கும் நேரத்தைத் திட்டமிடுதல், சத்தான உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி செய்தல், நண்பர்கள் உறவினர்களுடன் பேசுதல் போன்ற செயல்களின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியும். தேர்வு மற்றும் அதன் முடிவுகளில் அதிகமாக கவனத்தை செலுத்தாமல், கற்றல் செயல்முறையை அனுபவிக்கவும்.

உங்களால் நன்றாகப் படித்து வெற்றிகரமாக தேர்வு எழுத முடியும் என்று நம்புங்கள். உங்களால் நிச்சயம் முடியும். 

Next Story