கொழுப்பைக் குறைக்க உதவும் பிரண்டை


கொழுப்பைக் குறைக்க உதவும் பிரண்டை
x
தினத்தந்தி 13 Oct 2021 7:06 AM GMT (Updated: 13 Oct 2021 7:06 AM GMT)

பிரண்டை, அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.

குழந்தைப் பிறப்புக்கு பின்பு, பெரும்பாலான பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் சதை போடும். இதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டபோதும், அவை எதுவும் பலன் தராமல் வயிறு பெருத்துவிட்டது என்று கவலைப்படுவார்கள்.  

‘பெத்த வயிற்றில் பிரண்டையை கட்டு’ எனும் பழமொழி, கிராமங்களில் பரவலாக உள்ளது. பிரண்டையில் உள்ள சத்துக்களுக்கு அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. குழந்தை பெற்ற தாய்மார்கள் பிரண்டையைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அடிவயிற்றுக் கொழுப்பை எளிதாகக்  குறைக்கலாம் என்பதை வலியுறுத்தியே இந்த பழமொழி உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரண்டை, அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். பிரண்டையை வாரத்தில் இரண்டு முறை துவையலாக தயார் செய்து சாப்பிடலாம். பிரண்டை கிடைக்காத நேரங்களில் பிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் எடுத்து, பாலில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் உடல் பருமன் குறைவதோடு, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும்.

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். இதற்கு இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.
பிரண்டை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும். எனவே பிரண்டைத் தண்டு மற்றும் இலையை பயன்படுத்தும்போது இளம் இலைகள், தண்டுகளை நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி பயன்படுத்த வேண்டும்.

300-க்கும் மேற்பட்ட வியாதிகளை குணப்படுத்தக்கூடிய தன்மை பிரண்டைக்கு உள்ளது. நமது உடலை வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு ‘வஜ்ரவல்லி’ என்ற பெயரும் உள்ளது. 

பிரண்டையில் உள்ள சத்துக்கள்:

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் உள்ளன.

பிரண்டையின் வேறு பயன்கள்:
* பிரண்டை பசியைத் தூண்டும்.
* செரிமான சக்தியை அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைக்கும்.
* எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி, பிரண்டையில் உள்ளது.
* வீக்கம், சுளுக்கு, பிடிப்பு போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த மருந்து.
* வாரத்தில் இரண்டு முறை பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு அடர்த்தி குறைவு நோயின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
* பிரண்டை இலையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். 

Next Story