வீட்டுச் சுவரை அழகாக்கும் ‘வால் ஸ்டிக்கர்ஸ்’
வால் ஸ்டிக்கர்களைச் சுவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கணினி வைக்கும் மேசை, டி.வி. வைக்கும் மேசை, உணவு மேசை என எதற்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.
வீட்டுச் சுவர்களுக்கு வர்ணம் பூசுவதை விட, எளிய முறையில் அழகாக மாற்றுவது தான் ‘வால் ஸ்டிக்கர்'. அதிக செலவில்லாமல், குறைந்த நேரத்தில் மனதுக்கு பிடித்த விதத்தில் சுவர்களை அழகுபடுத்தலாம்.
வால் ஸ்டிக்கர்களை எந்தச் சுவரிலும் ஒட்டிக்கொள்ளலாம். அவை சேதமடைந்தாலும், எளிதாக மாற்ற முடியும். இதன் மூலம் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை சுவரில் ஒட்டுவதற்காக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாமே எளிதாகச் சுவர்களில் ஒட்ட வைக்க முடியும்.
எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?
வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை என இடத்துக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு ஸ்டிக்கரைத் தேர்வு செய்வது நல்லது. வால் ஸ்டிக்கர்களைச் சுவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கணினி வைக்கும் மேசை, டி.வி. வைக்கும் மேசை, உணவு மேசை என எதற்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.
இதில் பல வடிவங்கள், வண்ணங்கள் உள்ளன. கண்ணை உறுத்தாத வகையில், அதேசமயம் பொருட்களுக்குப் பொருந்தும் வகையில் தேர்வு செய்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வகைகள்
வால் ஸ்டிக்கரில் வினைல், 3டி வால் ஸ்டிக்கர் உட்பட பல வகைகள் உள்ளன. இதில் மலர்கள், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் உருவங்கள், கணித வடிவங்கள், இயற்கை காட்சிகள்,
செங்கல் போன்ற சுவர் அமைப்புகள் என ஏராளமான டிசைன்கள் உள்ளன. பார்டர் போன்ற வடிவங்களும் கிடைக்கின்றன. இவற்றைச் சரியாக தேர்வு செய்து பொருத்தினால் வீட்டின் அழகு மிளிரும்.
பொருத்துதல்
ஸ்டிக்கரை ஒட்டும் முன்பு, சுவரை முழுமையாகச் சுத்தம் செய்வது அவசியம். சிறு சிறு மேடு, பள்ளம் இருந்தால் அவற்றை சரி செய்து ஒரே சீராக வைக்க வேண்டும்.
பின்பு, ஸ்டிக்கரின் ஒரு பகுதியை லேசாகத் துண்டிக்க வேண்டும். இதன்பின்புறம், இருக்கும் ஸ்டிக்கரை கவனமாகக் கிழிக்க வேண்டும். இப்போது, வால் ஸ்டிக்கரின் பின்புறத்தில் சுவரில் ஒட்டிக் கொள்ளும் வகையில் பசை நிறைந்திருக்கும். இதை எந்தப் பகுதியில் ஒட்ட வேண்டுமோ அங்கு சரியாக வைத்து நன்றாக கையினால், அழுத்தி ஒட்ட வேண்டும். ஓரங்களைக் கவனமுடன் கையாள வேண்டும்.
வால் ஸ்டிக்கரை ஒட்டிய பின்பு, முறையாகப் பராமரித்தால் ஐந்து ஆண்டுகள் வரை கூட புதியது போல இருக்கும். இடையில் மாற்ற வேண்டும் என்று நினைத்தால், பழைய ஸ்டிக்கரைக் கிழித்துவிட்டு, புதிய ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளலாம்.
சமையல் அறையில் ஒட்டும்போது, எளிதில் சுத்தம் செய்யும் வகையிலும், எண்ணெய் பசை ஒட்டாத வகையிலும், எளிதில் தீ பிடிக்காத வகையிலும் வால் ஸ்டிக்கரைத் தேர்வு செய்வது சிறந்தது
Related Tags :
Next Story