ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இயற்கையான வழிமுறைகள்


ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இயற்கையான வழிமுறைகள்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:30 AM GMT (Updated: 20 Nov 2021 11:06 AM GMT)

ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மனம் விட்டு சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதாலும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சிரிப்பதால் சுவாசம் மூலம் கூடுதலாக ஆக்சிஜன் ரத்தத்தில் சேருகிறது. அது இதயத்தின் இயக்கத்துக்கு நல்லது.

ணி மற்றும் தொழில், குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் கல்வி, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பொறுப்புகள் அவரவர் நிலைக்கேற்ப அனைவருக்கும் உள்ளது. 

இதன் மூலம் உருவாகும் மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எளிமையான சில பழக்கங்களைப் பின்பற்றி மருந்து, மாத்திரை உதவி இல்லாமலேயே ரத்த அழுத்தத்தை இயற்கையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அவை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.


ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலே உடலில் ரத்த ஓட்டம் சீராக மாறும்; ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். எனவே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கு ஏற்ற எளிய பயிற்சிகளான யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்யலாம். 

தினமும் 20 அல்லது 30 நிமிடம் தியானப் பயிற்சி செய்வதன் மூலம் சிறுநீரக நொதி மேம்படுத்தபபடுகிறது. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்போனில் ‘ஹெட்போன்' அணிந்து கொண்டு தனிமையில் 30 நிமிடங்கள் அமைதியான இசையைக் கேட்டால் ரத்த அழுத்தம் சீராவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் குறிப்பிட்ட தூரம் நடைப்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இயற்கையான வழியாகும். நடப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக அமைவதால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டு இதயத்தின் பணி எளிதாகிறது. அதனால் உடலும், மனமும் லேசாக மாறி ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அமெரிக்க டப்ட்ஸ் பல்கலைக்கழக (Tufts University) மாணவர்கள் நடத்திய ஆய்வில் ஒரு நாளுக்கு  3 கப் செம்பருத்தி டீ பருகியவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

நமக்கு விருப்பமான நகைச்சுவை காட்சிகளை கண்டுகளிப்பது, புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது ஆகிய பழக்கங்களை மேற்கொள்ளலாம். 

அத்துடன் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மனம் விட்டு சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதாலும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சிரிப்பதால் சுவாசம் மூலம் கூடுதலாக ஆக்சிஜன் ரத்தத்தில் சேருகிறது. அது இதயத்தின் இயக்கத்துக்கு நல்லது.

சமூக அந்தஸ்து, கூச்சம் ஆகியவற்றை விலக்கி விட்டு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடலாம். அதன் மூலம் மனம் லேசாக மாறி, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் இயற்கையாக விலகுவதை அனுபவத்தில் உணரலாம்.

Next Story