மூக்கு அழகும் முக்கியமே..


மூக்கு அழகும் முக்கியமே..
x
தினத்தந்தி 17 Jan 2022 11:00 AM IST (Updated: 15 Jan 2022 4:14 PM IST)
t-max-icont-min-icon

மூக்கை சுற்றியுள்ள சருமத் துளைகளில் தூசி மற்றும் அழுக்குகள், இறந்த செல்கள் படிவதாலும், தலையில் உள்ள பொடுகு படிவதாலும் வெண்முள் மற்றும் கருமுள் தோன்றுகின்றன.

சிலருக்கு மூக்கை சுற்றிலும் வெள்ளை அல்லது கருமை நிறத்தில் சிறிய முள் போல ஆங்காங்கே மேலெழும்பி இருக்கும். இது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதற்கான தீர்வை இங்கே காணலாம்.

எதனால் உண்டாகிறது?
மூக்கை சுற்றியுள்ள சருமத் துளைகளில் தூசி மற்றும் அழுக்குகள், இறந்த செல்கள் படிவதாலும், தலையில் உள்ள பொடுகு படிவதாலும் வெண்முள் மற்றும் கருமுள் தோன்றுகின்றன.

எவ்வாறு நீக்கலாம்?
இந்த பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்குவதற்கு, வீரியமிக்க ரசாயனப் பொருட்கள் கலந்த ஸ்க்ரப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இவற்றின் மூலம் வெண்முள் மற்றும் கருமுள் தற்காலிகமாக நீங்கும். சில நாட்களில் மீண்டும் அதே பிரச்சினை தோன்ற ஆரம்பிக்கும். இதை  இயற்கையாகக் கிடைக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு எவ்வாறு நீக்கலாம் என்பதை இங்கு காண்போம்.

தேன்:
மூக்கை சுற்றிலும் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பின்பு சிறிதளவு நாட்டுத்தேனை அந்தப் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் வெந்நீரில் பருத்தித் துணியை நனைத்து மூக்கை சுற்றிலும் அழுத்தித் துடைக்கவும். இதன் மூலம் அழுக்குகள் முற்றிலும் நீங்கும். பின்பு தேனுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து மூக்குப் பகுதியில் மசாஜ் செய்யவும். மீண்டும் பருத்தித் துணி கொண்டு அழுத்தித் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூக்கின் துளைகளில் அடைபட்டுள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்வது நல்ல பலனைத் தரும்.

வெள்ளரி:
ஒரு சிறியத் துண்டு வெள்ளரியின் மேல் சிறிது சர்க்கரையை தூவவும். அதைக்கொண்டு மூக்கை சுற்றிலும் மிருதுவாக 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை நனைத்து, மூக்கை சுற்றிலும் துடைத்து எடுக்கவும். இது எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத மிக எளிமையான முறையாகும், வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம்.

தேயிலை எண்ணெய்:
தேயிலை எண்ணெய்யுடன் (டீ ட்ரீ ஆயில்), சிறிது சர்க்கரை கலந்து மூக்கை சுற்றி தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் முகத்தை கழுவவும். இது வெண்முள், கருமுள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தையும் மிருதுவாக்கும்.

தரமற்ற அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தாமல், தினசரி 2 அல்லது 3 முறை தூய்மையான நீரினால் முகம் கழுவ வேண்டும். பின்னர் தூய்மையான பருத்தித் துணியைக் கொண்டு முகத்தை துடைத்து வந்தாலே, இறந்த செல்கள் முகத்தில் படியாமல் பாதுகாக்கலாம்.

Next Story