உடல் எடையைக் குறைக்கும் மசாலாப் பொருட்கள்
எடைக் குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் எடை குறைப்புக்கு உதவுகின்றன.
நவீன வாழ்க்கையில், மனித இனத்தின் பெரும் சவாலாக இருப்பது உடல் எடை அதிகரிப்பும், அதன் மூலம் ஏற்படும் சிரமங்களும்தான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பெண்களே. எடைக் குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் எடை குறைப்புக்கு உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே…
1) லவங்கப் பட்டை:
அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை லவங்கப் பட்டை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பசியை அடக்குகிறது, உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, கொழுப்பை குறைக்கிறது, வளர் சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
2) சோம்பு:
‘பெருஞ்சீரகம்’ எனப்படும் சோம்பு, நார்ச்சத்து நிறைந்தது. இது வைட்டமின்களையும், தாது உப்புக்களையும் உடல் உறிஞ்சுவதற்கு உதவும். உடலில் சேரும் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். ஒரு டீஸ்பூன் சோம்பை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, வடிகட்டி ஆறவைக்கவும். இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி உடல் எடை குறையும்.
3) ஏலக்காய்:
இனிப்பு மற்றும் தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய், நறுமணத்தைத் தருவதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும்; குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் குடலில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. அமில-கார சமநிலையை உண்டாக்குகின்றன. செரிமானத்துக்கும் வழி வகுக்கின்றன.
4) மிளகு:
மிளகில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுகிறது. இதில் உள்ள ‘தெர்மோஜெனிக்’ தன்மை தேவையற்ற கலோரிகளையும், கொழுப்பையும் எரிக்கும்.
5) மஞ்சள்:
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ‘குர்குமின்’ உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், எடை அதிகரிக்காமலும் தடுக்கிறது.
6) வெந்தயம்:
நார்ச்சத்து நிறைந்த வெந்தயம், அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. வெந்தயத்தில் உள்ள நீரில் கரையும் தன்மைக் கொண்ட மூலக்கூறுகள், கொழுப்பு மூலக்கூறுகளை அழிக்கும் ஆற்றல் பெற்றவை.
இவற்றைத் தவிர சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போன்றவற்றிற்கும் உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு.
Related Tags :
Next Story