போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?
ஒரு நாள் முழுவதும், ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும்போது என்னென்ன முறைகளைப் பின்பற்றுவது? படிக்கும்போது நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் நிர்வகிப்பது என்பதற்கான வழிமுறைகள்...
தேர்வுகளுக்குத் தயாராகும்போது, நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் இருந்து, நமது வெற்றிக்கான பாதை தொடங்குகிறது. எனவே நேர மேலாண்மை குறித்த புரிதல் வேண்டும்.
இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 24 மணி நேரத்தில், நாம் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்தையும் குறித்த ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது சிறந்தது.
விளையாட்டு, உறக்கம், உணவு இடைவேளை, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடுதல் வேண்டும். நேரத்தைத் தேவையில்லாமல் எதில்
செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து, பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்தால் வீணாகும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
பிடித்த துறை எது? என்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு போட்டித் தேர்வுகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு அறிவித்த பின்பு படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல்,
தினசரி படிப்பதை வழக்கமாக வைத்திருத்தல் அவசியம்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை அமைந்து விடுவதில்லை. காலை, மாலை, இரவு என ஒவ்வொருவருக்கும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம் மாறுபடும். எனவே நம் மனநிலைக்கேற்றவாறு
படிக்கும் நேரத்தை ஒதுக்கித் திட்டமிடுதல் வேண்டும்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், நேரத்தைச் சேமிக்க சிறந்த வழியாகும்.
ஒரு நாள் முழுவதும், ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.
குறிப்பிட்ட இடைவெளியில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்வது, மூளை புத்துணர்வாகச் செயல்பட உதவும்.படிக்கும்பொழுது கவனச்சிதறல் ஏற்படாத வகையில், இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு குறித்த பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறோம் என்பதைவிட, எவ்வளவு தெளிவாகப் படிக்கிறோம் என்பது முக்கியமானது. குறிப்பிட்ட நேரம் செலவிட்டாலும், மனதில் குழப்பங்களுக்கும், கவலைகளுக்கும் இடம் தராமல் முழுக் கவனத்தோடு படிக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். இது எந்தப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கணிக்கவும் உதவும்.
புதிதாகத் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் அடிப்படையான விதிகள், தகவல்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். போட்டித்தேர்வுகள் என்றாலே பலரும் மனரீதியாகப் பதற்றம் கொள்வார்கள். அதைத் தவிர்த்து மனதளவில் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் இருப்பது முக்கியமானது.
Related Tags :
Next Story