இயற்கை விவசாயத்தில் அசத்தும் சித்ராதேவி
திருமணத்திற்குப் பின்பு துபாய் செல்லும் சூழல் ஏற்பட்டது. அங்கே பாலைவனத்தில் கூட விவசாயம் செய்வதைப் பார்த்து வியந்தேன். அப்போதுதான் நம் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என உறுதியாக முடிவு எடுத்தேன்.
சமீபகாலமாக இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் இளைய சமுதாயத் தினரிடம் அதிகரித்து வருகிறது. தற்போது பலர் இதில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தான் பணியாற்றிய மென்பொருள் துறைப் பணியில் இருந்து விலகி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார், திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த சித்ராதேவி.
மேலும் இயற்கை உரங்களைத் தயாரித்து விற்பனையும் செய்கிறார். இயற்கை உரத்தைப் பயன்படுத்தி மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோருக்கும் வழிகாட்டுகிறார்.
இது குறித்து சித்ராதேவி பகிர்ந்து கொண்டவை இங்கே..
“விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு சிறு வயதில் இருந்தே இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வீட்டில் முதல் பட்டதாரிப் பெண்ணான நான், அந்த சமயத்தில் வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மென்பொருள் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் சார்ந்த தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தாலும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.
திருமணத்திற்குப் பின்பு துபாய் செல்லும் சூழல் ஏற்பட்டது. அங்கே பாலைவனத்தில் கூட விவசாயம் செய்வதைப் பார்த்து வியந்தேன். அப்போதுதான் நம் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என உறுதியாக முடிவு எடுத்தேன்.
இந்தியா வந்தவுடன் இயற்கை விவசாயத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாடித் தோட்டத்தை அமைக்கத் தீர்மானித்தேன். குடும்பத்தினர் எனக்கு ஆதரவு அளித்தனர்.
கல்வி அறிவோடு, அனுபவ அறிவு பெறுவதற்காக கிராமங்களுக்குச் சென்று இயற்கை விவசாயம் செய்பவர்களிடம் இருந்து தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
முதலில் இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் மாடித் தோட்டம் அமைத்தபோது பல தோல்விகளைச் சந்தித்தாலும், தொடர்ந்து முயற்சி செய்தபோது நல்ல பலன் கிடைத்தது.
மாடித்தோட்டம் அமைப்பதற்கு இயற்கை உரங்களை கடைகளில்தான் வாங்கினேன். நாளடைவில் ஏன் நாமே இயற்கை உரங்களைத் தயார் செய்யக் கூடாது? என்ற எண்ணம் எழுந்தது.
இதற்காக பல விவசாயிகளையும், வேளாண் துறையைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து இயற்கை உரம் தயாரிக்கக் கற்றுக் கொண்டேன். பின்பு இயற்கை உரம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுபட்டேன். அதன் பின்னர் இயற்கை உரங்கள் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யத் தொடங்கினேன்.
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உள்ளது. அதே நேரத்தில், இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு இருப்பதில்லை. எனவே என்னிடம் இயற்கை உரங்கள் வாங்குபவர்களுக்கு அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதன் பலன் என்ன? என்பதை விளக்கமாகக் கூறி விழிப்புணர்வு உண்டாக்க விரும்பினேன்.
அதை செயல்படுத்த ஆரம்பித்தேன். இது மேலும் பலரை இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்கப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவை மட்டுமில்லாமல் நாட்டுரக காய்கறி விதைகளை, இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கும், மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் விற்பனை செய்து வருகிறோம். மாடித் தோட்டம் அமைப்பதற்கான இயற்கை உரம், மண்புழு உரம், பஞ்ச கவ்யம், மூலிகை பூச்சி விரட்டி, தேமோர் கரைசல் போன்றவற்றையும் விற்பனை செய்கிறோம்.
ஊரில் உள்ள பெண்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அவர்களுக்கு தேமோர் கரைசல், பஞ்சகவ்யம் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு பயிற்சி அளித்து தயாரிக்கச் செய்து பெற்றுக்கொள்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது.
விவசாயிகள் மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைக்கும் இயற்கை விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதை குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவர்களுக்கும் இயற்கை உரம் தயாரிப்பது, விதைகளை பராமரிப்பது, ஒரு மரம் எப்படி வளர்கிறது என்பதை பயிற்றுவித்து வருகிறேன்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? விதைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பது பற்றியும், முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
வேளாண் அலுவலகம் மூலமாகவும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இயற்கை விவசாயம், இயற்கை உரங்கள் இதோடு நின்றுவிடாமல் மரங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அதன் காரணமாக இதுவரை 60 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறேன். குறிப்பாக நாங்கள் வழங்கும் விதைப் பந்துகள் பழவகை மரங்களாய் இருக்குமாறு தேர்வு செய்தேன். அவை பறவைகளின் அழிவையும் குறைக்க உதவும் என்பதே இதற்கு காரணம்.
குழந்தைகளுக்கு விதைகளை பராமரிப்பது பற்றி சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில், அவர்களுடைய ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக விதைகள் கொண்ட பென்சில்களை உருவாக்கி அவர்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த பென்சிலைப் பயன்படுத்திய பின்பு, அதில் இருக்கும் விதைகளை நட்டு வளர்க்க குழந்தைகளும் ஆர்வமாய் இருக்கின்றனர்.
இயற்கை விவசாயம் மட்டுமே எதிர்காலத்தைக் காக்க இருக்கும் ஒரே வழி. எனவே அதை எதிர்கால தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கத்தில், நான் எடுக்கும் ஒவ்வொரு புது முயற்சிகளையும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டே செய்து வருகிறேன்’’ என்கிறார் சித்ரா தேவி.
Related Tags :
Next Story