மாவட்ட செய்திகள்

பரவசப் படுத்தும் பானை நடனம் + "||" + Dancing pleases pot

பரவசப் படுத்தும் பானை நடனம்

பரவசப் படுத்தும் பானை நடனம்
பாவாய்!, இது ராஜஸ்தான் மாநிலத்து புகழ்பெற்ற நடனம். மண்பாண்டங்களை வரிசைப்படுத்தி தலையில் சுமந்துகொண்டு லாவகமாக ஆடுவது இந்த நடனத்தின் சிறப்பு
–பாவாய்!, இது ராஜஸ்தான் மாநிலத்து புகழ்பெற்ற நடனம். மண்பாண்டங்களை வரிசைப்படுத்தி தலையில் சுமந்துகொண்டு லாவகமாக ஆடுவது இந்த நடனத்தின் சிறப்பு. ஆடுகின்ற கலைஞர் எப்படி சுழன்றாலும், தலையில் இருக்கும் கலைநயமிக்க மண்பாண்டங்கள் அப்படியே அசையாமல் இருக்கின்றன. இந்த பாவாய் நடனத்தை சென்னை மக்கள் இப்போது பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். கலாஷேத்ராவில் நடந்து வரும் ‘சம்பூர்ண் சந்தை’யில் இது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

பாவாய் நடனத்தில் பிரபலமான கலைஞர் சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கர் குல்லா பகுதியை சேர்ந்த இவர் 15 வருடங்களாக இந்த நடனத்தை ஆடி வருகிறார். கழுத்து நிறைய அணிகலன்கள். கை நிறைய வளையல்கள். தோரணமாய் தொங்கும் காதணிகள். இந்த ஆபரணங்களின் அணிவகுப்புக்கு இணையாக அவரது ஆடைகளும் அலங்கார வேலைப்பாடுகளால் ஜொலித்தன.

இசைக்கலைஞர்கள் ராகத்துடன் பாடல்களை பாட, இசையில் இழைந்தோடும் தாளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து சங்கீதா நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். மெதுவாக நடனம் ஆட தொடங்கியவர் சட்டென்று எகிறும் தாளத்திற்கு ஈடு கொடுத்து வேகத்தை அதிகப்படுத்தி ஆட்டத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார். அப்போது மற்றொரு பெண் நடனக்கலைஞரான குட்டி, தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண்பாண்டங்களை ஒவ்வொன்றாக சங்கீதாவின் தலையில் அடுக்கிக்கொண்டே வந்தார். கோபுரம் போல் மண்பாண்டங்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்க சங்கீதாவோ லாவகமாக ஆடிக்கொண்டே இருந்தார். குனிந்து, நிமிர்ந்து, துள்ளிக் குதித்தபோதும் பானைகள் பசை போட்டு ஒட்டியதுபோல் அசையாமல் இருந்தன. மயில் இறகு போல் ஆடையை தோகையாக விரித்து அங்கும், இங்கும் சங்கீதா ஆடிப்பாடிய விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.

மண்பாண்டங்கள் கீழே விழாதபடி எப்படி இவரால் நடனமாட முடிகிறது? என்ற வியப்புடன் ரசித்து கொண்டிருந்தவர்களை சங்கீதாவின் சாகசமும் சிலிர்க்கவைத்தது. பலகையின் மீது நீண்டு கொண்டிருந்த இரண்டு வாள்கள் மீது ஏறி நின்றபடி நடனத்தை தொடர்ந்தார். அங்கும் இங்கும் வாள் மீது நடந்தும், துள்ளி குதித்தும் ஆடினார்.

வாள்கள் மீது கால் பதித்து நடனத்தில் அசத்திய சங்கீதா கண்ணாடித் துண்டுகள் மீது நின்றும் நடனமாடி ஆச்சரியப்படுத்தினார். குவித்துவைக்கப்பட்டிருந்த கண்ணாடி துண்டுகள் மீது கால்களை அழுத்தி ‘ஜல் ஜல்’ என்று துள்ளிக்குதித்தார். இசைக்கலைஞர்கள் மீட்டிய தாளங்களின் வேகத்திற்கு சங்கீதாவின் கால்கள் பம்பரமாக சுழன்று நடனமாட, கண்ணாடி துண்டுகள் நாலாபுறமும் சிதறி விழுந்தன.

அதேபோல் நெருப்பு ஜூவாலையுடன் நடனமாடியும் திகைக்க வைத்தனர். சங்கீதா, குட்டி இருவரும் நடனம் ஆட, மற்றொரு கலைஞர் ராகேஷ் வாயில் இருந்த மண்எண்ணெய் மூலம் தீப்பந்தத்தை உருவாக்கி புல்லரிக்கவைத்தார். அவர் தீப்பந்துகளை உருவாக்கி விட்டுக்கொண்டே இருக்க அவைகளுக்கு நடுவே சங்கீதாவும், குட்டியும் லாவகமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

 ராஜஸ்தானின் பாரம்பரிய நடனம் குறித்தும், நடனக்கலை மீது தங்களுக்கு இருக்கும் ஈடுபாடு குறித்தும் சங்கீதா, குட்டி இருவரும் சொல்ல கேட்போம்.

‘‘எங்களுடைய முன்னோர் மன்னர் காலத்தில் அரண்மனையில் நடனம் ஆடி கலையை வளர்த்தார்கள். முன்பு மகாராணியை வரவேற்பதற்காக ஆடப்பட்ட நடனம் பிற்காலத்தில் பாரம்பரிய கலாசாரமாகவே மாறிப்போனது. பாவாய் நடனத்தை போலவே சக்ரி, ஷாரி, கயர், காவரி, கூமர் போன்ற நடனங்களும் ராஜஸ்தானில் பரவலாக ஆடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பாரம்பரிய கலைகள் அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் பல தலைமுறையாக நடனமாடி வருகிறோம். பாரம்பரிய கலைகளை பாதுகாக்க சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு நடனத்தை பழக்கப்படுத்தி விடுவோம். எங்கள் ஊரிலேயே 100–க்கும் மேற்பட்ட நடனக்குழுக்கள் இருக்கின்றன. கலாசார திருவிழாக்கள், கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறோம். நாங்கள் பிரமாண்டமான மேடைகளில் நடனம் ஆடுவதை விரும்புவதில்லை. பெரும்பாலான நடனங் களும் வீதியில் நிகழ்த்தப்படுபவையாகவே இருக்கின்றன. அதனால் எல்லா தரப்பு மக்களும் கண்டு ரசிக்கமுடியும். பாரம்பரிய கலையும் பாதுகாக்கப்படும். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்’’ என்
கிறார்கள்.

 நடனமாடும் பெண் கலைஞர்களே தாங்கள் உடுத்தும் ஆடைகள், அணியும் ஆபரணங்களில் டிசைன்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். கை                     வினைப்பொருட்களை தாங்களாகவே தயாரித்தும் நாடு முழுவதும் நடக்கும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அதனை காணவருபவர்களை கவரும் விதத்திலும், தங்கள் மாநில பாரம்பரிய கலையை பரப்பும் விதத்திலும் நடனமாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கைவினைப் பொருட்களை ஆண்கள் தயாரிக்க, அதனை அழகுபடுத்தும் கலைவேலைப்பாடுகளை பெண்கள் செய்கிறார்கள். இவர்களின் தயாரிப்பில் உருவாகும் கைவினைப்பொருட்கள் ஆடைகளை அலங்கரிக்கின்றன. அதுபற்றி சங்கீதா சொல்கிறார்..

‘‘நாங்கள் உடுத்தும் ஆடை மட்டுமல்ல உருவாக்கும் கைவினைப் பொருட்களும் கலைவேலைப்பாட்டுடன் வண்ணமயமாக ஜொலிக்கும். அவைதான் எங்கள் மாநில கலாசாரத்தை காட்சிப்படுத்துபவை. அவை தனித்துவமாக தெரியும் வகையில் கலைவேலைப்பாடுகளை செய்கிறோம். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களை மரப்பலகை, துணிகளை பயன்படுத்தி தயாரிக்கிறோம். இவை பிளாஸ்டிக் பொருட்களை விட நீண்ட நாட்கள் உழைக்கும். சுற்றுப்புறத்திற்கும் கேடு விளைவிக்காது. யானை, ஒட்டகம், குதிரை, பொம்மலாட்ட பொம்மைகள் போன்றவற்றை சிறிதாக உருவாக்கி ஆடைகளில் இணைத்து அழகுப்படுத்துவோம். வண்ணமயமாக தெரிய வேண்டும் என்பதற்காக பளிச்சிடும் நிறத்தில் பாசிகளை கோர்த்து அழகுபடுத்துகிறோம். பாலைவன பகுதியில் எங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும் ஒட்டகத்தை கவுரவிக்கும் வகையில் ஒட்டக பொம்மைகளை அதிகம் உருவாக்குகிறோம். அவைகளை மற்ற மாநில சிறுவர்களும் விரும்பி வாங்கு கிறார்கள். ஆண்கள் மரப்பலகையில் உருவத்தை செதுக்கி கொடுப்பார்கள். பெண்கள் அதில் விதவிதமான டிசைன்களை உருவாக்கி அழகுப்படுத்துவோம். கைவினைப் பொருட்களை நாங்கள் குடிசைத் தொழிலாக செய்துவருகிறோம்’’ என்றார்.

கண்காட்சியில் பொம்மலாட்டமும் நடக்கிறது. நடனத்திற்கு இணையாக அதுவும் பார்வையாளர்களை கவர்ந்தது. வினோத் என்பவர் இதனை நிகழ்த்தினார்.

கலாஷேத்ராவில் நடந்துவரும் இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. அதில் 26 மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்களின் விதவிதமான கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.