மாவட்ட செய்திகள்

‘விழி ’ இழந்தவர்களுக்கு கல்வி ‘ஒளி’! + "||" + Education light for those who have lost the gaze

‘விழி ’ இழந்தவர்களுக்கு கல்வி ‘ஒளி’!

‘விழி ’  இழந்தவர்களுக்கு  கல்வி ‘ஒளி’!
‘லிட் த லைட்’. இந்த அமைப்பின் பெயரே, அது செய்யும் சமூகப் பணியை விளக்கி விடுகிறது. பார்வை இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதே ‘லிட் த லைட்’ அமைப்பின் முக்கியப் பணி.
‘லிட் த லைட்’. இந்த அமைப்பின் பெயரே, அது செய்யும் சமூகப் பணியை விளக்கி விடுகிறது. பார்வை இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதே ‘லிட் த லைட்’ அமைப்பின் முக்கியப் பணி. படித்துக் கொண்டிருக்கும் பார்வையில்லாத மாணவர்களை ஒளிர்வூட்டு வதுடன், படிக்கும் ஆசை இருந்தும், சூழ்நிலை கைதியாகி வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு கல்விக்கான வழியைக் காட்டுகிறது இந்த அமைப்பு.

பரத், லீலாவதி, கார்த்திகேயன், அதியன், ராம்குமார், ரவிகாந்த் என இந்த அமைப்பில் இருப்பவர்களின் பெயர் பட்டியலைப் போலவே, இவர்களின் பணிப் பட்டியலும் நீள்கிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல், தேர்வுகளுக்கு ‘ஸ்கிரைபாக’ செல்வது, பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆடியோ புத்தகங்களை உருவாக்குவது என இந்த அமைப்பினரின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.

“வேலைக்குச் சென்று, வீடு திரும்புகையில் ஏராளமான பார்வையற்றவர்களை பார்க்க முடிந்தது. ஓடும் ரெயிலில் உயிரைப் பணயம் வைத்து பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பேச ஆரம்பித்தபோது தான், அவர்களுக்குள் ஒளிந்திருந்த படிப்பு ஆர்வம் தெரியவந்தது. பள்ளி, கல்லூரி கல்வியை படிக்க ஆசைப்படுபவர்களுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லை. இதை உணர்ந்தபோது, சற்றும் யோசிக்காமல் களத்தில் இறங்கிவிட்டேன்’ என்று கூறும் பரத், ‘லிட் த லைட்’ அமைப்பின் முதல் ஒளி.  

இவர் ரெயிலில் பழக்கமான, பார்வையற்ற மாணவர்களின் தூண்டுதலால் அகப்பார்வையாளர்களுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, பார்வையில்லாத மாணவர்களுக்காக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘தன்னந்தனியாக எனக்குள் முளைத்த ஆர்வம், இன்று சமூக அமைப்பாக வளர்ந்திருக்கிறது. நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் என்னுடன் கை கோர்த்ததால், பார்வை இழந்தவர்களுக்கு உதவும் அமைப்பை உருவாக்கினோம். இதில் 5 மாணவர்களுக்கு, ஒரு வழிகாட்டி என கல்விப் பாடங்களை பயிற்றுவிக்கிறோம். வருடம் முழுக்க பார்வையற்ற மாணவர்களோடு பயணிக்கிறோம். அவர் களை தேர்விற்கு பழக்குகிறோம். அதில் அவர்களை வெற்றிப்பெற செய்கிறோம்’ என்று மகிழ்ச்சியோடு பேசும் பரத், பார்வையற்றவர்களுக்காக ஏராளமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதில் அகப்பார்வையாளர்களுக்காக தேர்வு எழுதும் ‘ஸ்கிரைப்’ முயற்சியும் ஒன்று.

‘பார்வையில்லாத மாணவர்கள் பெரும்பாடுபட்டு படித்தாலும், அவர்களால் தேர்வு எழுத முடிவதில்லை. ஏனெனில் அவர் களுக்கு உதவியாக தேர்வு எழுதும் ‘ஸ்கிரைப்’ எழுத்தாளர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனால் 50 சதவீத மாணவர்கள், தேர்வை எழுதாமலேயே தோற்றுவிடுகின்றனர். இதுபற்றி தெரிந்தபோது, எனது உறவினரை ஸ்கிரைபாக அனுப்பிவைத்தேன். ஒன்றில் ஆரம்பித்த ‘ஸ்கிரைப்’ எழுத்தாளர் முயற்சி, இன்று ஆயிரக்கணக்காக உயர்ந்து விட்டது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ‘ஸ்கிரைப்’பாக அனுப்பியிருக்கிறோம்.சிலர் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை சென்றும் தேர்வு எழுதி வருகின்றனர். லீலாவதி, ஸ்கிரைப் எழுத்தாளர் பணிகளை பார்த்துக் கொள்கிறார். கல்லூரி மாணவ– மாணவிகளைச் சந்தித்துப் பேசி, ஸ்கிரைபாக மாற்றுவதில் அவர் கைத்தேர்ந்தவர். அதனால் வருடந்தோறும் கணிசமான அளவில் ஸ்கிரைப் கிடைக்கிறார்கள். இவ்வளவு முயற்சிக்கு பின்னரும், தேவைக்கு குறைவான ஸ்கிரைபுகளே கிடைக்கிறார்கள் என்பது தான் சோகம் கலந்த உண்மை’ என்பவர், ‘சொல்வதை பிழையில்லாமல் எழுதத் தெரிந்திருந்தாலே பொதுத்தேர்வுகளில் ‘ஸ்கிரைப்’ எழுத்தாளராக செயல்படலாம்’ என்பதையும் பதிவு செய்கிறார்.

‘எங்களுடைய வேலைகளை எங்களுக்குள் பிரித்துக்கொள்கிறோம். ஸ்கிரைப் வேலைகளை லீலாவதி பார்த்து கொண்டால், பாடம் சொல்லிக் கொடுப்பதை வரலட்சுமி– ஹேமந்த் கவனித்துக்கொள்கிறார்கள். அதியன் பார்வையற்ற மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வர முயல்கிறார். ராம்குமார்–ரவிகாந்த் ஆகியோர் வேலைவாய்ப்புகளை கவனித்துக்கொள்ள, கார்த்திகேயன் ஆடியோ நூலகப் பணிகளை பார்த்துக்கொள்கிறார். ஆம்! பார்வையற்ற மாணவர்கள் தானாகவே படித்துக்கொள்ள ஏதுவாக, ஆடியோ நூலகத்தை உருவாக்கி வருகிறோம். அதாவது பாடப்புத்தகத்தை அப்படியே ஆடியோ வடிவில் மாற்றிக்கொடுப்பது தான் இந்த நூலகத்தின் வேலை. இதுவரை 200–க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை ஆடியோ புத்தகங்களாக மாற்றியிருக்கிறோம். வெகுவிரைவில் மீதமிருக்கும் பாடப்புத்தகங்களையும், மற்ற புத்தகங்களையும் ஆடியோ புத்தகங்களாக மாற்றிவிடுவோம். இவை முழுமைப்பெற்றால், பார்வையற்ற மாணவர்கள் எங்களது வழிகாட்டுதல் இல்லாமலேயே படிக்கலாம். நினைத்த நேரத்தில் நினைத்த ஆடியோ புத்தகங்களை பயன்படுத்தி, படித்துக்கொள்ள முடியும். இதற்கான தனி இணையதளமும் வடிவமைக்கப்பட்டு வருகிறது’ என்பவர், பார்வையற்ற விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்துகிறார்.

‘கல்வியில் மட்டுமல்ல இசை, விளையாட்டு, சாதனை முயற்சி போன்ற பல துறைகளிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள், தடகள விளையாட்டு வீராங்கனைகள் என பல வகையிலும் மாணவர்களை தயார்படுத்துகிறோம். எங்களது வழிகாட்டுதலில் படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பது பெருமையாக இருக்கிறது. இதுமட்டுமின்றி... பார்வையற்றவர்களுக்கான கலாசார போட்டிகளையும் அடிக்கடி நடத்துகிறோம். பார்வை இல்லாதவர்கள் படிக்க நல்ல பாதை அமைத்து கொடுப்பதே எங்களுடைய நோக்கம். அதை சரிவர செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்வோம்’ என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெறும் பரத், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர். சொந்த ஊர் கிருஷ்ணகிரி அரசம்பட்டி என்றாலும் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.

சென்னையில் இருக்கும் பிரபல பூங்காக்களில் ஒன்றுக் கூடும் ‘லிட் த லைட்’ அமைப்பினர் பல சமூக அமைப்பு களுடன் கைக்கோர்த்து சமூக விழிப்புணர்வு நாடகங்களை போக்குவரத்து சிக்னல்களிலும் நடத்துகிறார்கள்.