மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம் + "||" + Celebration of cattle festival throughout the district

மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்

மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் 2-வது நாளான நேற்று மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சேலம்,

தமிழகத்தின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் 2-வது நாளான நேற்று உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் மாடுகளை வணங்கும் வகையில் மாட்டுப்பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. இது சேலம் மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விவசாயிகள் தங்கள் மாடுகளை நன்றாக குளிப்பாட்டி பல்வேறு விதமாக அலங்கரித்தும், உடம்பில் பலவண்ண பொடிகளை தூவியும், கொம்புகளை அலங்கரித்தும் அவற்றுக்கு பூஜை செய்தனர். மேலும் மாட்டின் பழைய “தாம்புக்கயிறு” மாற்றப்பட்டு புதிய தாம்புக்கயிறு கட்டப்பட்டது. பின்னர் மாடுகளுக்கு பொங்கல், செங்கரும்பு, வாழைப்பழங்களை வழங்கினார்கள்.

வண்டி மாடுகள்

இதுபோல சேலம் கன்னங்குறிச்சி, புதுஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, தலைவாசல், மேட்டூர், கொளத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. பல விவசாயிகள் தங்கள் விவசாய தோட்டங்களில் மாஇலை, கரும்பில் தோரணம் கட்டி, வீட்டின் முன்பு கோலமிட்டு மண்பானையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றும் தொழிலாளர்கள் தங்கள் வண்டி மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து பூஜை செய்தனர்.

யானைக்கு பூஜை

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள யானை ராஜேஸ்வரி தற்போது கோரிமேடு பகுதியில் ஒரு செட் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையை நேற்று கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் பூசி அழகுப்படுத்தப்பட்டது. பின்னர், சர்க்கரை பொங்கல் வைத்து கரும்பு, பழம் ஆகியவை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி யானைக்கு வழங்கப்பட்டது.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பானை உடைத்தல், பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.