மாவட்ட செய்திகள்

அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்திரை கல்-எழுத்துள்ள பானை கண்டுபிடிப்பு + "||" + Archaeological find 2,500 years ago the stone-labeling pot inventory

அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்திரை கல்-எழுத்துள்ள பானை கண்டுபிடிப்பு

அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்திரை கல்-எழுத்துள்ள பானை கண்டுபிடிப்பு
சென்னிமலை அருகே கொடுமணலில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரத்திற்காக பயன்படுத்திய முத்திரை கல் மற்றும் எழுத்துகள் உள்ள பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் 1981-ம் ஆண்டு முதல் தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம், தமிழக தொல்லியல் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது கொடுமணலில் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றதோடு தொழில் கலைஞர்களின் கூடமாக இருந்ததும், இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான அடையாளங்களும் ஆராய்ச்சியில் தெரியவந்தது.

இந்த நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய தொல்லியல் அகழ்வாய்வு (பிரிவு-6) துறையின் சார்பில் அதன் கண்காணிப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் என்பவர் தலைமையில் உதவி தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர்கள் ராஜேஸ், வீரராகவன் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவிகள் ஷோபனா ராஜன், பவானி, உமா மகேஷ்வரி, சாருதா, பரந்தாமன் (தஞ்சை பல்கலைக்கழகம்) ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல் கொடுமணலில் உள்ள செலவனக்காடு என்ற பகுதியில் 2 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக முதல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் 5 மீட்டர் நீள அகலத்தில் 1.5 மீட்டர் ஆழத்தில் 25 குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகளில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஆய்வு பணி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் கொடுமணலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல் அகழ்வாய்வு குழியில் தொல்பொருட்கள் எதுவும் கிடைக்காவிட்டாலும் 1.4 மீட்டர் ஆழத்தில் நடுகுழிகளோடு களி மண்ணால் ஆன சதுர வடிவிலான வீடு அல்லது தொழிற்கூடம் போல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2-ம் அகழ்வாய்வு இடத்தில் அதே நீள-அகலம் மற்றும் ஆழத்தில் 13 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகளை செய்தோம். இதில் பல பழங்கால பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அ, ஆ, இ, ஈ என்ற தமிழ் மொழியின் முதல் நான்கு உயிரெழுத்துகள் பிராமி வரி வடிவத்தில் எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது. இவை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருளாக இருக்கலாம். 2 செ.மீ அகலத்தில் நந்தி முத்திரை கொண்ட சுடுமண் முத்திரை கல்லும் கிடைத்துள்ளது. இந்த முத்திரையின் அடிப்பகுதியில் “லவச“ என்ற பிராமி எழுத்துகள் உள்ளன. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் எங்கும் முத்திரை கிடைத்ததில்லை. 10 செ.மீ நீளமுள்ள இரும்பால் ஆன முறுக்கப்பட்ட தச்சர்கள் பயன்படுத்தும் துளை ஊசியும் கிடைத்துள்ளது.

எழுத்துகள் உள்ள பானை ஓடு, சுடுமண் முத்திரை, தச்சரின் துளை ஊசி ஆகிய இந்த மூன்று பொருட்களும் தமிழகத்திலேயே முதன்முறையாக ஆராய்ச்சியின் போது கொடுமணலில் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 203 பொருட்கள் இரும்பாலும், 45 பொருட்கள் செம்பு மூலமும், 6 பொருட்கள் தங்கத்தினாலும், 144 பொருட்கள் தந்தம் மற்றும் எலும்பினாலும், 84 பொருட்கள் சுடு மண்ணாலும், 319 பொருட்கள் மணிகள் மூலமும், 71 பொருட்கள் சுடுமணிகள் மூலமும், 51 பொருட்கள் சூது பவளத்தாலும், 11 பொருட்கள் அமெதிஸ்ட்டாவாலும், 61 பொருட்கள் கண்ணாடியாலும் மற்ற பொருட்கள் பிற மூல பொருட்களாலும் செய்தவை ஆகும்.

இந்த அகழ்வாராய்வில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்பிராமி எழுத்துகள் பொறித்துள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இவற்றில் தமிழ் மற்றும் பிராகிருத ஆண் பெயர்கள் காணப்படுகின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்ட கரித்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை கால நிர்ணயம் செய்ய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படும். இந்த குழிகள் தவிர 4 ஈம குழிகளில் அகழாய்வு செய்யப்பட்டது. இந்த குழிகளில் அகழாய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. ஒரு குழியை தவிர 3 குழிகளில் இரு அறைகள் கொண்ட கல்லறை காணப்பட்டது. 3 கல்லறைகளில் முழு பானைகளும், மனித எலும்புகளும் கிடைத்துள்ளன. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பனியார கல், 12 செ.மீ உயரத்தில் சிறிய அளவிலான செம்பால் ஆன நாய் பொம்மை, இரும்பு ஆயுதங்கள், சங்குகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தற்போது வெயில் அதிகமாக இருப்பதாலும், கோடை மழை காரணமாகவும் அடுத்த மாதம் (ஜூன்) முதல் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.