மாவட்ட செய்திகள்

வங்கி பெண் அதிகாரியின் தாலிச்சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் கைது + "||" + Two young men arrested for robbing a bank girl

வங்கி பெண் அதிகாரியின் தாலிச்சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் கைது

வங்கி பெண் அதிகாரியின் தாலிச்சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் கைது
திருச்சி அருகே பட்டப்பகலில் வங்கி பெண் அதிகாரியின் தாலிச்சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். துரத்திச்சென்று பிடித்த பொதுமக்களை அரிவாளை வீசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,

திருச்சியை அடுத்த அரியமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 48). இவர், தஞ்சை மாவட்டம் தோகூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வேலைக்கு தினமும் ஸ்கூட்டரில் சென்று வருவதை கற்பகவள்ளி வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலை 9 மணிக்கு அரியமங்கலத்தில் இருந்து தோகூருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார். திருச்சி மாவட்டம் வேங்கூருக்கும், தஞ்சை காவிரிகரை எல்லைக்கும் இடையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகே ஸ்கூட்டரில் கற்பகவள்ளி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, அவரை வழிமறித்தனர். மின்னல் வேகத்தில் அவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்சங்லியை பறித்துக்கொண்டு, இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மாவட்டம் கிளியூர் நோக்கி தப்பினர். சங்கிலியை பறிகொடுத்த கற்பகவள்ளி திருடன்... திருடன்... பிடியுங்கள் என சத்தம் போட்டார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் உடனடியாக தங்களது மோட்டார் சைக்கிளில் திருடர்களை துரத்த தொடங்கினர். கற்பகவள்ளியும் செல்போன் மூலம் கிளியூர் கிராமத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக சுதாரித்த கிராம மக்களும் ஊர் எல்லையில் திருடர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

அங்கு கிராம மக்கள் திரண்டிருப்பதை கண்ட 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே சாய்ந்தது. அதற்குள் கிராம மக்கள் 2 திருடர்களையும் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மோட்டார் சைக்கிளில் இருந்த அரிவாளை எடுத்து கிராம மக்களை நோக்கி சுழற்றியபடி மிரட்டல் விடுத்தனர். ஒரு கட்டத்தில் கிராம மக்களை நோக்கி அரிவாளை வீசி மிரட்டினர். அதில் அவர்கள் லாவகமாக தப்பியதால், அரிவாள் தரையில் விழுந்தது.

உடனே சுதாரித்த கிராம மக்கள் 2 திருடர்களையும் பிடித்து தர்ம அடி கொடுக்க தொடங்கினர். இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த திருவெறும்பூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து திருடர்கள் 2 பேரையும் மீட்டனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் இருவரும் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 25), பிரவீன் என்ற பாம்பு பிரவீன் (25) ஆவர். பிரவீனின் தாயார் பத்மா திருச்சி பொன்மலை ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இருவரும் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து வழிப்பறி தொழிலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...