மாவட்ட செய்திகள்

முகமூடி வரன்கள் + "||" + Mask Proposals

முகமூடி வரன்கள்

முகமூடி வரன்கள்
ஜப்பானில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.
நீண்ட நேரப் பணிச் சுமையால், குடும்ப வாழ்க்கைக்கு அதிக நேரம் செலவிட முடியாது என்ற காரணத்துக்காகவே, பலரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை.

திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்கும் தங்கள் துணையை பார்த்து, பழகி, திருமணம் செய்ய போதுமான அவகாசம் இல்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் தயக்கத்திலும் வெட்கத்திலும் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது டோக்கியோவில் இயங்கும் திருமண ஏற்பாட்டு மையம்.

ஆணோ, பெண்ணோ தனக்குத் தேவையான இணையைத் தேர்ந்தெடுத்தவுடன், அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறது. ஜோடிகளுக்கு முகமூடிகளை அணிவிக்கிறது. இதனால் ஆண்களும் பெண்களும் தயக்கம் இன்றி, மனம் விட்டுப் பேச முடிகிறது.

‘‘முகமூடி இல்லாமல் இணையைத் தேடும்போது, முதலில் அழகுதான் சட்டென்று ஈர்க்கிறது. அதனால் குணத்தைப் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் முகமூடி அணிந்துகொண்டு சந்திக்கும்போது, முகம் தெரிவதில்லை.

பேச்சின் மூலம் ஒருவரின் குணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேச முடிகிறது. சாலைகளில், பூங்காக்களில், உணவகங்களில் சந்தித்தால் கூட யாரும் நம்மைக் கவனித்துப் பார்க்க மாட்டார்கள்.

 ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய அளவில் இணையைத் தேர்ந்தெடுப்பதில் பங்களிக்கிறது. நானும் என் கணவரும் உருவத்தைப் பார்க்காமல், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டோம்’’ என்கிறார் யசுமாசு கிஷி.

டெப் அனிவர்சரி திருமண ஏற்பாட்டு மையத்தை நடத்தும் கேய் மட்சுமுரா, ‘‘ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய மாற்றத்தை ஜப்பானிய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்தின் மீது நாட்டத்தை அதிகரித்திருக்கிறது’’ என்கிறார்.