மாவட்ட செய்திகள்

நகைக்கடைகளில் நூதன முறையில் மோசடி; 2 பெண்கள் கைது + "||" + Jewelry stores Fraudulent nonsense 2 women arrested

நகைக்கடைகளில் நூதன முறையில் மோசடி; 2 பெண்கள் கைது

நகைக்கடைகளில் நூதன முறையில் மோசடி; 2 பெண்கள் கைது
ராமநாதபுரம் நகரில் நகைகடைகளில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சிகில்ராஜ்வீதி பகுதியில் நகைகடைகளில் 2 பெண்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் அந்த கடைகளுக்கு சென்று விசாரணை செய்தபோது 2 பெண்களை கடைக்காரர்கள் பிடித்து வைத்திருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் மனைவி அழகுமாரி(வயது26), சங்கர் மனைவி சரோஜா(32) என்பது தெரியவந்தது.

இவர்கள் விருதுநகரில் இருந்து இங்கு வந்து பித்தளை வளையங்களின் மீது வெள்ளி முலாம் பூசி வெள்ளி நகை என்று நகைக்கடைகளில் நூதனமுறையில் விற்பனை செய்துள்ளனர். இந்த வெள்ளி நகைகளுக்கு பதிலாக நகைகடைகளில் தங்க நகைகளை வாங்குவதாக கூறியதால் அவர்கள் அளித்த வெள்ளி நகைகளை உண்மையான வெள்ளி என்று நம்பி கடைக்காரர்கள் வாங்கி உள்ளனர். இந்த வெள்ளி நகைகளை பரிசோதித்து பார்த்தபோது அவை பித்தளை என்பது தெரியவந்துள்ளது.

பித்தளை நகைகளின் மீது வெள்ளி முலாம் பூசி இவ்வாறு விற்பனை செய்வதுடன் அந்த கடையிலேயே அதற்கு மாற்றாக தங்க நகை வாங்கிவிடுவதால் யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டமிட்டு இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுஉள்ளனர். இவர்கள் இருவரும் இதுபோன்று 5 கிலோ பித்தளை நகைகளை வெள்ளி முலாம் பூசி கொண்டு வந்து மாற்ற முயன்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து நகைகடை உரிமையாளர் மனோகரன்(65) அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கண்ட 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பித்தளைக்கு பதிலாக மாற்றி வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீதும் பஜார் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.