மாவட்ட செய்திகள்

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அதிகாரியிடம் மனு + "||" + Proposal to set up 8 pipelines between Salem and Chennai

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அதிகாரியிடம் மனு

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அதிகாரியிடம் மனு
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்கள் பெற்றார்.

பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் குப்பனூர், சின்னகவுண்டாபுரம், ராமலிங்கபுரம், வரகம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த பசுமை சாலை திட்டம் அமைந்தால் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வன நிலங்கள் அழிந்து விடும். இதனால் 25 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் வீடுகள் இடிக்கும் போது குடியிருக்க வீடு இல்லாத நிலை ஏற்படும். சிறு, குறு விவசாயிகளான எங்களுக்கு தற்போது உள்ள இந்த விவசாய நிலங்கள் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.

இது தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை. எனவே பசுமை வழிச்சாலைக்கு எங்கள் நிலத்தை தர இயலாது. சேலத்தில் இருந்து சென்னை செல்ல தற்போது 4 பிரதான சாலைகள் உள்ளன. தற்போது உள்ள இந்த பிரதான சாலைகளை விரிவுபடுத்தினாலே போதுமானதாக இருக்கும். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 லாரிகளில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தோம். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக பணிகள் வழங்கவில்லை. இதனால் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.