மாவட்ட செய்திகள்

வடக்கன்குளம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பர் குத்திக்கொலை + "||" + Near Vadankankulam With wife Adultery; Friend Kill

வடக்கன்குளம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பர் குத்திக்கொலை

வடக்கன்குளம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பர் குத்திக்கொலை
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கன்குளம், 

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கன்குளம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை பற்றிய விவரம் வருமாறு:–

கூலி தொழிலாளிகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்த சந்திரன் மகன் பிரேம்குமார் (வயது 38). இவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செந்தில்குமார் (38) என்பவரும் நண்பர்கள். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

பிரேம்குமாருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமாருக்கும் திருமணம் முடிந்து இசக்கியம்மாள் என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர்.

தனிமையில் சந்திப்பு

செந்தில்குமார் வீட்டுக்கு பிரேம்குமார் சென்று அங்கிருந்துதான் இருவரும் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது பிரேம்குமாருக்கும், இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் ரகசியமாக தனிமையில் சந்தித்து வந்தனர். செந்தில்குமார் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு பிரேம்குமார் வந்து இசக்கியம்மாளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக செந்தில்குமாருக்கு தெரிய வந்தது. அவர், பிரேம்குமாருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய மனைவியிடம் பேசி, பிரேம்குமாருடன் உள்ள தொடர்பை விட்டுவிடும்படி கூறினார். கணவர் கூறும் போது சரி என்று சொல்லிய இசக்கியம்மாளுக்கு, பிரேம்குமாருடனான தொடர்பை விட்டுவிட முடியவில்லை.

கணவன்– மனைவியாக...

கொஞ்ச நாட்கள் பிரேம்குமாருடன் பேசாமல் இருந்த இசக்கியம்மாள் மீண்டும் பிரேம்குமாருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அவர்கள் இருவரும் கணவன்– மனைவியாக வாழ முடிவு செய்தனர்.

அதன்படி இசக்கியம்மாளை அழைத்துக் கொண்டு வடக்கன்குளம் அல்பிநகருக்கு வந்தார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கினர். பிரேம்குமார், கொத்தன்குளத்தில் இருந்து அடிக்கடி வடக்கன்குளம் வந்து இசக்கியம்மாளை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

குத்திக் கொலை

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் நேற்று மாலை 3 மணி அளவில் பிரேம்குமாரை தேடி வடக்கன்குளம் சென்றார். அங்கு தனது மனைவியுடன் பிரேம்குமார் இருப்பதை பார்த்தவுடன் மேலும் ஆத்திரம் அடைந்து அங்கு தகராறு செய்தார். அப்போது பிரேம்குமாரும், செந்தில்குமாரும் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றவே செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்குமாரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பிரேம்குமாரின் வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

கைது

தகவல் அறிந்த வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ், பணகுடி இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்–இன்ஸ்பெக்டர் பிரவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தன்குளத்தில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாத நண்பரை பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் வடக்கன்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.