மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + "||" + Teacher Transfer Conference will be held honestly

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
ஆசிரியர் பணிமாறுதல் நேர்மையாக நடைபெறும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள புதுவள்ளியம்பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நேற்று பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விழாவுக்கு தலைமை தாங்கினார். திருப்பூர் சத்தியபாமா எம்.பி., முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கோபி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பணிகளை தொடங்கிவைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான இந்த அரசில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. பிளஸ்–2 வகுப்பில் பட்டய கணக்காளர் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 500 பட்டய கணக்காளர்கள் பயிற்சி அளிப்பார்கள். இதனால் 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் பயன் அடைவார்கள்.

துணி வடிவமைப்பு (டிசைனிங்), ஆஸ்பத்திரி நிர்வாகம் போன்ற 12 தொழில் கல்வி படிப்புகள் நடப்பு ஆண்டில் பிளஸ்–2 வகுப்பில் கற்றுத்தரப்படும். பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ, மாணவிகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க ஐ.ஐ.டி. பேராசிரியர்களை வைத்து பயிற்சி அளிக்கப்படும். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனால் மாணவ–மாணவிகள் எத்தகைய தேர்வையும் எதிர்கொள்ளலாம்.

ஜெர்மனி, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்து 600 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் புலமை பெற 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். இது கல்வித்துறையில் புதிய முயற்சி.

தனியார் பள்ளியில் படித்தவர்கள் அரசு பள்ளியில் சேர வந்தால் எந்த தடையும் இல்லாமல் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு எந்த ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடைபெறும். தென் மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறைவு. அதனால் வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கேட்பவர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலை பார்க்க விரும்புகிறார்கள்.

கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். இதேபோல் ஈரோட்டில் இருந்து கோபிக்கு 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.