மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The chief teacher demonstrated the graduate teachers to fill vacancies

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி நாகையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தலைமையிட செயலாளர் ஜோதிராமன், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட துணை தலைவர் ஆதீஸ்வரன், மாவட்ட இணை செயலாளர்கள் தங்கதுரை, செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணியோடு, தலைமை ஆசிரியர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புக்கான பொறுப்புப்படி 20 சதவீதம் வழங்க வேண்டும்.

காலி பணியிடங்களை வெளிப்படையாக தெரிவித்து, பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நேர்மையாக நடத்தவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக நியமனம் செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிவேம்பையன், வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.