மாவட்ட செய்திகள்

அரியாங்குப்பம் பகுதியில் 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை + "||" + Temple break the piggy bank Money robbery

அரியாங்குப்பம் பகுதியில் 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

அரியாங்குப்பம் பகுதியில் 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
அரியாங்குப்பத்தில் ஒரே நாள் இரவில் 3 கோவில்களின் உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியில் மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட திரவுபதி அம்மன் கோவில், பார்த்தசாரதி பெருமாள் கோவில் மற்றும் செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த பிரசித்த பெற்ற 3 கோயில்களும் குடியிருப்புகள் மத்தியிலும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியிலும் அமைந்துள்ளது.

இதில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த மாதம் (மே) 15–ந் தேதி தொடங்கி இந்த மாதம் (ஜூன்) 3–ந் தேதி வரை நடந்து முடிந்தது. இதனால் இந்த கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவில் பூசாரி கோபு அய்யர் நேற்றுக்காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோவில் அறங்காவல் குழுவினரிடம் தகவல் தெரிவித்தார். அறங்காவல் குழுவினர் விரைந்து வந்து உண்டியல் உடைந்திருந்ததையும், அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சந்தேகத்தின்பேரில் அருகில் உள்ள மற்ற 2 கோவில்களையும் பார்வையிட்டனர். அப்போது திரவுபதி அம்மன் மற்றும் பார்த்தசாரதி பெருமாள் ஆகிய கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது. தெரிய வந்தது. ஒரேநாள் இரவில் 3 கோவில்களிலும் மர்ம நபர்கள் புகுந்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உண்டியல்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு உடைக்கப்பட்ட உண்டியல்களில் கைரேகைகள் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்தனர். அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் யாரேனும் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்ததா என கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில் அறங்காவல் குழுவை சேர்ந்த ஆறுமுகம் அரியாங்குப்பம் போலீஸில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரேநாள் இரவில் 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி பரவியதும் ஏராளமானோர் கோவில்களின் வெளியே திரண்டனர். இந்த சம்பவம் காரணமாக அரியாங்குப்பம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.