மாவட்ட செய்திகள்

ரெயிலில் ‘அல்போன்சா’ + "||" + Alphonso mango in train

ரெயிலில் ‘அல்போன்சா’

ரெயிலில் ‘அல்போன்சா’
இது மாம்பழ சீசன். ‘கோடை கால பழங்களின் அரசன்’ என்று சிறப்பிக்கப்படும் மாம்பழங்களின் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்.
நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. அவற்றுள் அல்போன்சா வகை மாம்பழம் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. அவை விளைவிக்கப்படும் பகுதியை பொறுத்து அவைகளின் சுவையும் மாறுபடுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் பகுதியில் விளையும் அல்போன்சா மாம்பழங்கள் தித்திப்பு கொண்டவை. அவைகளின் சதைப்பகுதியும் செழுமை நிறைந்தவை. இந்த வகை மாம்பழங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை இயற்கை விவசாய சாகுபடி முறையில்தான் விளைவிக்கப்படுகின்றன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

இந்த ருசி மிகுந்த அல்போன்சா மாம்பழங்களை ரெயில் பயணிகளின் இருக்கைக்கே கொண்டு வந்து ருசிக்க கொடுக்கும் திட்டத்தை ரெயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. அங்குள்ள சுய உதவிக்குழுவினர் மூலம் அந்த பகுதி வழியே செல்லும் ரெயில் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். ஏற்றுமதி வகையை சார்ந்தவை என்பதால் அதன் விலை அதிகம். ரெயில் பயணிகளுக்காக ஒரு டஜன் பழத்தின் விலை 470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் மூலம் பதிவு செய்தும் மாம்பழங்களை வாங்கலாம்.