மாவட்ட செய்திகள்

சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவிகளில் ஆனந்த குளியல் + "||" + Seasons were built by: Tourists gathered in the crash Bathing in water

சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவிகளில் ஆனந்த குளியல்

சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவிகளில் ஆனந்த குளியல்
சீசன் களை கட்டியதை தொடர்ந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி, 

சீசன் களை கட்டியதை தொடர்ந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

பலத்த சாரல் மழை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டுக்கான சீசன், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கியது. சீசன் தொடங்கிய முதல் வாரம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் மற்றும் புலியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நேற்று அதிகாலை முதலே கார், வேன், ஆட்டோக்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இதனால் சீசன் களை கட்டியது.

இதேபோல் பழைய குற்றாலம், புலியருவியிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அனைத்து அருவிகளிலும் நேற்று நன்றாக தண்ணீர் கொட்டியதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஐந்தருவியை விரும்பிய சுற்றுலா பயணிகள்

மெயின் அருவியில் கூட்டம் முண்டியடித்ததால் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தனர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மெயின் அருவியை விட, ஐந்தருவியில் குளிப்பதற்கு விரும்பினர். அங்கு 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியை விட ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வானம் மேக மூட்டமாக இருந்தது. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இடையிடையே வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியதுடன் ஊட்டியை போன்று இதமான சூழ்நிலை நிலவியது.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நேற்று 2–வது நாளாகவும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மலையில் மழை பெய்து வருவதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிக்கரை வெறிச்சோடி கிடந்தது.

களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. எனவே களக்காடு புலிகள் காப்பக பகுதி மற்றும் தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை எதிரொலியாக புலிகள் காப்பக பகுதி நேற்று மூடப்பட்டது.

குத்திரப்பாஞ்சான் அருவி

பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கன்னிமாறன்தோப்பு ஓடை, ஆலந்துறை ஆறு கால்வாய், குத்திரப்பாஞ்சான் அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. மியா புதுக்குளம், பரிவிரிசூரியன், நகரை குளங்களுக்கும் தண்ணீர் வருகிறது. பணகுடி அனுமன்நதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வழக்கத்தை விட குத்திரப்பாஞ்சான் அருவியில் அதிகமாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.