மாவட்ட செய்திகள்

என்.எல்.சி. அதிகாரி காரில் கடத்தி கொலை: வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் பரிமாற்றம் செய்தது எப்படி? திடுக்கிடும் தகவல்கள் + "||" + NLC officer hijacked in car and killed

என்.எல்.சி. அதிகாரி காரில் கடத்தி கொலை: வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் பரிமாற்றம் செய்தது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்

என்.எல்.சி. அதிகாரி காரில் கடத்தி கொலை: வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் பரிமாற்றம் செய்தது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்
காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட என்.எல்.சி. அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் பரிமாற்றம் செய்தது எப்படி? என்பது குறித்து கைதான 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 17–ஐ சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). என்.எல்.சி. முதலாவது சுரங்க அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவர், கடந்த ஏப்ரல் மாதம் 22–ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இது பற்றி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அசோக்குமாரின் அண்ணன் சதீசன், கடந்த மாதம் 20–ந்தேதி அசோக்குமாரை காணவில்லை என்று நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அசோக்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் வேறொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சதீசன், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அசோக்குமாரை யாராவது பணத்துக்காக கடத்திச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அசோக்குமாரை அவரது நண்பர்களான நெய்வேலி அருகே உள்ள என்.ஜே.வி. நகரை சேர்ந்த சாத்தப்பன் மகன் சுரேஷ்குமார் (38), வடலூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ்(37), நெய்வேலி 26–வது வட்டத்தை சேர்ந்த காமராஜ் ஆகிய 3 பேரும் பணத்துக்காக கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் இளங்கோவின் நிலத்தில் அசோக்குமாரின் உடலை புதைத்துள்ளனர்.

இதையடுத்து 4 பேர் மீதும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிந்திரராஜ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோ ஆகிய 3 பேரை கைது செய்தார். இவ்வழக்கில் தொடர்புடைய காமராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தது எப்படி? என்பது குறித்து கைதான 3 பேரும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:–

அசோக்குமார் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவர் அடிக்கடி மது அருந்தும் கூடத்தில் மதுகுடிப்பது வழக்கம். அங்கு தான் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது மதுபோதையில் அசோக்குமார், தனது வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாக அவர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்துள்ளது.

இந்த நிலையில் பணத்துக்காக அவரை கடத்தி கொலை செய்ய 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று அவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவாங்கி கொடுத்து காரில் கடத்தி அவரது ஏ.டி.எம். எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் அசோக்குமாரின் முகத்தில் ‘டேப்’ ஒட்டி அவரை மூச்சு திணற செய்து கொலை செய்தனர். பின்னர் குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தில் உள்ள இளங்கோவின் உதவியுடன் நிலத்தில் அசோக்குமாரின் உடலை புதைத்தனர்.

இது வெளியே தெரியாததால் போலீசார் அவரை காணவில்லை என்று வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்குமார், கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்குள்ள ஒரு நபரின் போன் மூலம் அசோக்குமார் வேலை பார்த்த என்.எல்.சி. சுரங்க அலுவலகத்திற்கு போன் செய்து அசோக்குமாரின் உறவினர் பேசுவது போல் பேசி சில நாட்கள் விடுமுறை கூறியுள்ளார்.

இதையடுத்து சுரேஷ்குமார் சென்னையில் உள்ள தனது அண்ணன் சுவாமிநாதனிடம் தொடர்பு கொண்டு ஒருவரின் வங்கி எண், ஏ.டி.எம். எண் உள்ளது. அதில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கோவை ஒப்பனகார வீதியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனம் கமி‌ஷன் அடிப்படையில் வங்கி எண், ஏ.டி.எம். எண்ணை வைத்து பணம் மாற்றம் செய்து கொடுக்கும் என்றார்.

இதை கேட்ட சுரேஷ்குமார், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகினார். அப்போது அவர், தன்னுடைய நண்பர் அசோக்குமார் மதுபோதைக்கு அடிமையாகி சுயநினைவை இழந்துவிட்டார். அவர் தற்போது போதை மறுவாழ்வு இல்லத்தில் உள்ளார். அவரது சிகிச்சைக்கும், அவரது குடும்பத்திற்கும் உதவ அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்த தனியார் நிறுவனம், அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து கடந்த மாதம் 3–ந் தேதி ரூ.11 லட்சமும், 11–ந் தேதி ரூ.8 லட்சமும் என சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு மாற்றி கொடுத்தது. இதற்காக சுரேஷ்குமார் அந்த நிறுவனத்திற்கு கமி‌ஷனாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு ராஜேசுக்கு, சுரேஷ்குமார் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்துள்ளார்.

இதற்கிடையே அசோக்குமார் கணக்கு வைத்திருந்த வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சுரேஷ்குமார், ராஜேசை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் அசோக்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...