மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து முதல்கட்டமாக 10 கைதிகள் விடுதலை + "||" + MGR. Thirteen prisoners freed from the Trichy Central Jail on the occasion of the centenary

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து முதல்கட்டமாக 10 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து முதல்கட்டமாக 10 கைதிகள் விடுதலை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து முதல்கட்டமாக 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
திருச்சி,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல்கட்டமாக கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 10 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு வந்திருந்தது.

அதன்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து, திருச்சி நவல்பட்டை சேர்ந்த சுதாகர் (வயது 41), தஞ்சை மாவட்டம் வல்லத்தை சேர்ந்த ராஜா(45), ஒரத்தநாடு பிச்சைவேல்(41), தஞ்சை அய்யப்பன்(36), திருவையாறு பகுதியை சேர்ந்த கணேசன்(43), பன்னீர்செல்வம்(41), குமார் (36), திருவிடைமருதூர் பூமிநாதன்(45), பூதலூர் ரவி(47), கும்பகோணம் சின்னதம்பி(48) ஆகிய 10 கைதிகள் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர். சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் ஆகியோர் விடுதலையானவர்களுக்கு அறிவுரைகள் கூறியும், கைகொடுத்தும் அனுப்பி வைத்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக சிறைவாசல் அருகே காத்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் விடுதலையானவர்களை கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து விடுதலையான 10 பேரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர். இதில் பன்னீர்செல்வம் “இனிமேல் இந்த பக்கமே வரமாட்டேன்” என்று மண்டியிட்டு மண்ணை தொட்டு சிறைச்சாலையை நோக்கி வணங்கி சென்றார்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், “விடுதலையான 10 பேரும் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள். நன்னடத்தை அடிப்படையில் அரசின் உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். விடுதலையானவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் கூட்டு சேரக்கூடாது. உள்ளூரை விட்டு வெளியில் செல்லக்கூடாது. போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் நன்னடத்தை அலுவலரிடம் மாதம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும். இவற்றை பின்பற்றாதவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள். விடுதலையான கைதிகளுக்கு மாவட்ட வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.ஆயிரமும், சிறைத்துறை நிதியில் இருந்து தலா ரூ.ஆயிரமும், ரோட்டரி சங்கத்தினர் மூலம் புதிய ஆடையும் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் இருந்து 248 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

திருச்சி சிறை சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் கூறுகையில், “திருச்சி, மதுரை, வேலூர், சேலம் உள்பட 9 மத்திய சிறைகளில் பேக்கரி கூடம் அமைக்கப்பட உள்ளது. திருச்சியில் பேக்கரி கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிந்து விடும். பேக்கரி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களை தயாரிக்க கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். மேலும் அரசு மருத்துவமனையில் பேக்கரி உணவு பொருட்களை விற்பனை செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.