மாவட்ட செய்திகள்

சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், ஜனதா தளம் எஸ் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் + "||" + Siddaramaiah led Congress, Janata Dal S Coalition Coordination Committee First Meeting

சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், ஜனதா தளம் எஸ் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம்

சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், ஜனதா தளம் எஸ் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம்
சித்தராமையா தலைமையில் காங்கிரஸ், ஜனதா தளம் எஸ் கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். கூட்டணி கட்சிகளிடையே நல்லுறவை பேணும் வகையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், சதீஸ் ஜார்கிகோளி உள்பட சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில் எம்.பி.பட்டீலை டெல்லிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவழைத்து பேசி சமாதானப்படுத்தினார். இதையடுத்து எம்.பி.பட்டீல் அமைதியாகிவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. குழுவின் தலைவரான முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி, குழு ஒருங்கிணைப்பாளர் டேனிஷ்அலி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குதல், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை அமல்படுத்துதல், முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், சில அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள மனக்கசப்பை சரிசெய்தல் போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.