மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைப்பு + "||" + Thoothukudi shootings: CBCI The collected traces are handed over to the Kovilpatti court

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.
கோவில்பட்டி,

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே வழக்குகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ரத்தக்கறை படிந்த உடைகள், உடலில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தடயங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். இதனை கடந்த வாரம் கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது கோர்ட்டில் தலைமை எழுத்தர் இல்லாததால், அதனை திரும்ப கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று மாலை 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவில்பட்டி கோர்ட்டுக்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார், தாங்கள் சேகரித்த தடயங்களை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சங்கர் முன்னிலையில் தலைமை எழுத்தரிடம் ஒப்படைத்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தடயங்கள் அனைத்தும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.