மாவட்ட செய்திகள்

பெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது + "||" + Trying to kill parents; Suicide Planned young men arrested

பெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது

பெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது
பெற்றோரை கொல்ல முயற்சிசெய்தும், தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,

பெங்களூருவில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், தோழிகளுடன் பழகுவதையும் கண்டித்த பெற்றோரை கொலை செய்ய வாலிபர் ஒருவர் முயற்சித்தார். பின்னர் அவர் தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு துப்பாக்கியுடன் சுற்றி வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

பெங்களூரு குருபரஹள்ளி சர்க்கிளில் இரவு நேரத்தில் பசவேஸ்வரா நகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது அவர் நாட்டு துப்பாக்கியும், 8 குண்டுகளும் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் பெங்களூரு காமாட்சிபாளையாவில் உள்ள விருஷபாவதி நகரை சேர்ந்த சரத்(வயது 25) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை திருடி, அதை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நாட்டு துப்பாக்கி, குண்டுகள் பற்றிய விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சரத் தனது பெற்றோரை சுட்டு கொன்றுவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கைதான சரத், டிப்ளமோ படித்துள்ளார். இவர் தனது தோழிகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். மேலும், சரத்தின் காதலையும் அவருடைய பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை. காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியதால் மனம் உடைந்த சரத் தனது பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, உணவில் விஷம் வைத்து தனது பெற்றோரை கொலை செய்ய அவர் முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் அவர் விஷம் கலந்தும் பெற்றோரை கொலை செய்ய முயன்றார். அதுவும் தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவருடைய பெற்றோர், சரத்தை வீட்டை விட்டு வெளியே விரட்டியதோடு, சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீசில் புகார் செய்தனர். வீட்டை விட்டு வெளியேறிய சரத் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், பெற்றோரை கொல்லும் முயற்சி கைகொடுக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அவர் தனது காரில் வேகமாக சென்று மாகடி அருகே விபத்தில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவர் இறக்கவில்லை. மாறாக காயங்கள் அடைந்தார்.

இதனால் சோர்ந்துபோன சரத், எளிதில் பெற்றோரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்வது எப்படி என்பது குறித்து இணையதளம் மற்றும் யூ-டியூப்களில் தேடினார். அப்போது, அவருக்கு கிடைத்த விடை தான் துப்பாக்கி. இதனால், துப்பாக்கியை பயன்படுத்தி தனது பெற்றோரை சுட்டு கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, அவர் பீகாரை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 10 குண்டுகளை வாங்கி வைத்து கொண்டார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதியில் வைத்து துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொண்டார். இந்த பயிற்சியின்போது 2 குண்டுகளை அவர் பயன்படுத்தினார். இதில் எதிர்பாராத விதமாக ஒரு குண்டு பாய்ந்து அவருடைய கைவிரல் ஒன்று துண்டானது. பின்னர், அவர் விபத்தில் கைவிரல் துண்டானதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக அவர் தனது பெற்றோரை கொன்று தற்கொலை செய்வதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்த வேளையில் தான் அவர் திருட்டில் ஈடுபட தொடங்கினர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அவர் தான் திருடிய மோட்டார் சைக்கிளில் பயணித்து போலீசாரிடம் சிக்கினார்.

கைதான சரத்திடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 8 குண்டுகள், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.