மாவட்ட செய்திகள்

நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள் + "||" + Public Siege of the City Cooperative Bank

நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூரில் கடன் வழங்கும் முகாமிற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், 

சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (டாம்கோ) சார்பில் குறைந்த வட்டி விகிதத்தில், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன், கறவை மாடுகள் கடன், கல்விக்கடன், உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கடன் திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து சிறுபான்மையின மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தாலுகாக்களை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் குமரன் ரோட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் நேற்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் நேற்று காலையில் இருந்தே கடன் பெறுவதற்காக பொதுமக்கள் பலர் ஆவணங்களுடன் நகர கூட்டுறவு வங்கிக்கு வந்து கொண்டிருந்தனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அதிகாரிகள் வராததால் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வங்கிக்கு வருகை தந்தனர்.

அப்போது கடந்த முறை விண்ணப்பித்தும் இதுவரை கடன் தொகை வழங்கப்படவில்லை. எனவே கடனை உடனே வழங்க வேண்டும் என்றும், கடன் தொகை பெறுவதற்கு பிணையம் கேட்கப்படுகிறது. எனவே பிணையம் கேட்கக்கூடாது எனக்கூறியும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், வங்கி மேலாளர் குமரேசன் மற்றும் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கடன் தொகை வழங்கப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்களுக்கு கடன் தொகை ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தி தெரிவிப்பதாகவும், பிணையம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பின்னர் கலைந்து சென்றனர். கடன் தொகை கேட்டு சிறுபான்மையினர் 60-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.