மாவட்ட செய்திகள்

மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன + "||" + Madurai under the excavation Details are hidden

மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன

மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன
‘மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன’ என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் கருத்தரங்கு மற்றும் ஆவணம்-29 இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. நிகழ்ச்சிக்கு தொல்லியல் கழக துணைத்தலைவர் செந்தீ நடராஜன் தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியரும், தொல்லியல் கழக செயலாளருமான ராசவேலு வரவேற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் ஓய்வுபெற்ற தொல்லியல் துறைத்தலைவர் எ.சுப்பராயலு கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.


சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும் போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு தான் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது.

நம்முடைய தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்து உள்ளது. ஒவ்வொருவரும் நமது மாவட்டத்தில் உள்ள பழமையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு விட்டு வெளி மாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பழமையான கல்வெட்டுகள், சிலைகள் ஏதேனும் இருப்பது தெரியவந்தால் உடனடியாக பொதுமக்கள், அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘பழமையான வரலாற்று சின்னங்களையும், பண்பாட்டையும் காக்கும் முக்கிய பங்கில் தொல்லியல் துறை விளங்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்கள் குறித்த வரலாறு புத்தகம் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் புத்தகம் வெளியிடப்படும்’ என்றார்.

கலெக்டர் கந்தசாமி பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம். தற்போது நாம் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகைகளை உற்று நோக்கினால் அதன் பின்னணியில் கண்டிப்பாக வரலாற்று சின்னங்கள் இருக்கும். திருவண்ணாமலையில் விரைவில் தொல்லியல் கண்காட்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த கூடம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்’ என்றார்.

முன்னதாக தொல்லியல் ஒளிப்பட கண்காட்சி மற்றும் அரும்பொருட்கள் கண்காட்சியை நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.