மாவட்ட செய்திகள்

தேவாலா அருகே இரவு முழுவதும் உறுமல்: புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Near Dewala All night Hold the tiger cage Public request

தேவாலா அருகே இரவு முழுவதும் உறுமல்: புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தேவாலா அருகே இரவு முழுவதும் உறுமல்: புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தேவாலா அருகே இரவு முழுவதும் உறுமிய புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கார், வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

இதனிடையே தேவாலா அருகே வாழமூலா, பிலாமூலா கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு புலி உறுமும் சத்தம் கேட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இரவு 10 மணிக்கு வாழமூலா கிராமத்தை சேர்ந்த அர்ஜூண் என்பவரது வீட்டின் அருகே புலி நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் சார்பில் தேவாலா அட்டி உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜா கூடலூர் கோட்ட வன அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் வாழமூலா, பிலாமூலா பகுதியில் இரவில் உறுமியவாறு புலி நடமாட்டம் உள்ளது. கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தற்போது புலி நடமாட்டம் உள்ளது.

இதனால் கிராமத்தில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே கிராம மக்களின் நலன் கருதி அப்பகுதியில் சுற்றித்திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.