மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை முயற்சி + "||" + Collector's office: 6 members of the same family have committed suicide

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை முயற்சி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷ பாட்டிலுடன் வந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, கலெக்டரிடம் வழங்குவார்கள். கடந்த ஆண்டு கந்துவட்டி கொடுமை காரணமாக, அச்சன்புதூர் போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலை தவிர மற்ற அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்துக்கு வருகின்ற அனைவரும் பலத்த போலீஸ் சோதனைக்கு பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் எடுத்து வரும் குடிநீர் பாட்டிலையும் போலீசார் திறந்து குடித்து பார்த்த பிறகே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வழக்கம்போல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி தேவிபட்டினத்தைச் சேர்ந்த விவசாயி திருமலைசெல்வன் (வயது 45) தன்னுடைய தாயார் சோலையம்மாள், மனைவி தங்கம்மாள், மகள்கள் ஜனனி, வைஷ்ணவி, மகன் ராகுல் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

அப்போது திருமலைசெல்வன் வைத்திருந்த பையை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் விஷ பாட்டில் இருந்தது தெரியவந்தது. உடனே திருமலைசெல்வன் விஷ பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றார். போலீசார் அவரது கையில் இருந்த விஷ பாட்டிலை தட்டி விட்டனர்.

பின்னர் திருமலைசெல்வன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது திருமலைசெல்வன், தனது நிலத்தில் பயிரிட்ட வெங்காய பயிர்களை சிலர் ரசாயனம் மூலம் அழித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து திருமலைசெல்வன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கலெக்டர் ஷில்பாவிடம் போலீசார் அழைத்து சென்று, மனு கொடுக்க செய்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விஷ பாட்டிலுடன் வந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை