மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் + "||" + In Bangalore To place advertising boards To be banned

பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்

பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்
பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் வலியுறுத்தின.
பெங்களூரு,

பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க அரசின் திட்டத்தை தெரிவிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிக்க பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் பத்மாவதி, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் பேசியதாவது:-
பெங்களூருவில் சட்ட விரோதமான முறையில் அதிக எண்ணிக்கையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல் உள்ளன. நட்சத்திரங்களை எப்படி எண்ண முடியாதோ, அதே போல தான் விளம்பர பலகைகளையும் எண்ண முடியாத நிலை உள்ளது.

அந்த விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சியில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை. முன் அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை. விதான சவுதாவை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது என்று விதிமுறையை கொண்டுவர வேண்டும்.

நகரில் உள்ள சில கடைகளில் பெயர் பலகைகள் கன்னடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகைகளில் 60 சதவீத இடத்தில் கன்னடத்தில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். விளம்பர பலகைகளை வைக்க நகரில் முழுமையாக தடை விதித்தாலும் நல்லது தான். இவ்வாறு சிவராஜ் பேசினார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசியதாவது:-
சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஐகோர்ட்டு தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-11-ம் ஆண்டு நடராஜ் மேயராக இருந்தபோது விளம்பர கொள்கை வகுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2006-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு விளம்பர பலகை விதிமுறைகள் சரியாகவே உள்ளது. 2012-ம் ஆண்டு அதை விட சிறப்பான முறையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை முழுமையாக அமல்படுத்தி இருந்தால் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவிக்கும் நிலை வந்திருக்காது. நகரில் உள்ள மேம்பாலங்கள் மீது விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு விளம்பர பலகைகளை வைப்பதால் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. நகரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத விளம்பர பலகைகள் உள்ளன. விளம்பர பலகைகளை வைக்கும் நிறுவனங்கள் மாநகராட்சிக்கு ரூ.369 கோடி வரி பாக்கியை வைத்துள்ளது. அதை முதலில் வசூலிக்க வேண்டும். பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.

குதிரை பந்தய போட்டிக்கு வரி விதிக்காமல் இருப்பது ஏன்?. 2 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க வேண்டும். அரை நிர்வாண விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது. பாரம்பரிய கட்டிடங்கள், மயானங்கள், பூங்காக்கள், கோவில் கட்டிடங்களில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. பறக்கும் நடைபாதைகளை அவசியம் உள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் ஐகோர்ட்டு தலையிடும் நிலை வரும். இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா கவுன்சிலர் மஞ்சுநாத்ராஜூ, “சாந்தகுமாரி மேயராக இருந்தபோது பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விளம்பர பலகைகள் மூலம் குறைவான அளவில் தான் மாநகராட்சிக்கு வரி வருகிறது. அதனால் விளம்பர பிரிவையே நீக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் வரை விளம்பர பிரிவை மூடுவது நல்லது“ என்றார்.