மாவட்ட செய்திகள்

கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு + "||" + Brother mourning dead Brother death

கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு

கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு
கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பியும் பரிதாபமாக இறந்தார். சாவிலும் இணை பிரியாத சகோதர பாசத்தை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர்.

கூடலூர்,

கூடலூர் தொரப்பள்ளி அருகே முளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 85). ஊட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது மகன் வீட்டில் ரத்தினம் வசித்து வந்தார். இந்த நிலையில் ரத்தினத்துக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது. மேலும் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் ரத்தினம் உயிரிழந்தார்.

இதனால் உறவினர்கள் முளப்பள்ளிக்கு வந்தனர். இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ் பகுதியில் வசித்து வந்த ரத்தினத்தின் தம்பி மனோகரன் (78) என்பவரும் வந்து இருந்தார். தனது அண்ணன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதனிடையே ரத்தினத்தின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு அண்ணன் உடலை பார்த்தவாறு மனோகரன் அழுது கொண்டிருந்தார். பின்னர் ஒரு நாற்காலியில் சோகத்துடன் அமர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்தவாறு மனோகரன் திடீரென மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் மனோகரனின் உடலை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து கிளன்வன்ஸ் பகுதிக்கு கொண்டு சென்றனர். சாவிலும் இணை பிரியாத சகோதரர்கள் என உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சோகத்துடன் கண்கலங்கினர். இதனிடையே அண்ணன் உடல் முளப்பள்ளியிலும், தம்பி உடல் கிளன்வன்ஸ் பகுதியிலும் இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.