மாவட்ட செய்திகள்

‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு + "||" + Water management protection Need to make sure Union Minister Nitin Gadkari speech

‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு

‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
‘தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
சென்னை,

வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழா மற்றும் சென்னையில் உள்ள அவருடைய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி ‘நீர் தொடர்பான சர்வதேச ஆலோசனை, தேவை, வினியோகம் மற்றும் நிர்வாகத்தின் மேம்பாடு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தண்ணீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கு, மற்றொரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை. நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்தாலே தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும். நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை உறுதியாக கடைப்பிடித்து சேமிக்க வேண்டும்.

கடலோர பகுதிகளில் கடல் நீர் மூலம் விவசாயம் செய்வதில் கவனம் செலுத்தலாம். இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளலாம். வெள்ளப்பெருக்கின்போது வரும் நீரை சேமித்து அதை விவசாயம் மற்ற தேவைகளுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

சரியான வழிமுறையை தேர்ந்தெடுத்து நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். கால்வாய்கள் அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு இருப்பதால் சாலை அமைக்கும் போதே அதையொட்டி குழாய்கள் மூலம் நீரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கர்நாடக மந்திரி என்.எச்.சிவசங்கர ரெட்டி, நிர்வாக அதிகாரி ராஜீவ் மிட்டல் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் மதுரா சுவாமிநாதன் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் டாக்டர் வை.செல்வம் ஆண்டறிக்கை வெளியிட்டார். சூழல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் ஆர்.ரெங்கலட்சுமி நன்றி கூறினார்.