மாவட்ட செய்திகள்

சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது + "||" + Tourist attractions vericcotina fed Boat House closed

சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது

சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது. பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி,தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்தின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு நுழைவுவாயிலில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.

ஊட்டி படகு இல்லத்தில் வார விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், நேற்று படகு இல்லத்தின் உள்பகுதியில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி ரத்து செய்யப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டதால், அங்கு கார்களில் வந்த சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. சில சுற்றுலா பயணிகள் மட்டும் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி பூங்காவில் வலம் வந்தனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தருவார்கள். இதனால் ஊட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். ஆனால், நேற்று வாகன போக்குவரத்து இன்றி சேரிங்கிராஸ் பகுதி வெறிச்சோடியது.

அதேபோல் ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. கமர்சியல் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.