மாவட்ட செய்திகள்

கருணாநிதி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு வந்த கிராம பொதுமக்கள் கதறி அழுதனர் + "||" + Villagers rushed to pay homage to the Karunanidhi home

கருணாநிதி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு வந்த கிராம பொதுமக்கள் கதறி அழுதனர்

கருணாநிதி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு வந்த கிராம பொதுமக்கள் கதறி அழுதனர்
திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கருணாநிதி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊர் ஆகும். இந்த ஊரில் தற்போது கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் வசித்து வருகிறார்கள். கருணாநிதி மறைவால் தற்போது திருக்குவளை கிராமம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி உள்ளது. திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லம் தற்போது நூலகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி மறைவையொட்டி அவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு வந்து கருணாநிதி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நேற்றும் திருக்குவளையில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு திரளான மக்கள் வந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். நேரம் செல்லச்செல்ல அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் திருக்குவளையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கருணாநிதி வீட்டின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு அதில் திரளான பெண்கள் அமர்ந்து கருணாநிதி படத்தின் முன்பு ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். அப்போது துக்கம் தாங்க முடியாமல் ஒரு பெண் மயங்கி விழுந்தார். உடனே மற்ற பெண்கள் அவர் மீது தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.

மேலும் திருக்குவளையை சுற்றி உள்ள கிராமங்களான வாழைக்கரை, மேலவெளி, திருக்குவளை கடைத்தெரு, எட்டுக்குடி, குண்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் திருக்குவளைக்கு வந்ததால் நேற்று திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எங்கு நோக்கினும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் திருக்குவளை பகுதி முழுவதும் கருணாநிதி படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

திருக்குவளை பகுதியில் சில தி.மு.க. தொண்டர்கள் ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் கருணாநிதி படத்தை வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். திருக்குவளை மேலப்பிடாகை, திருப்பூண்டி, கீழையூர், எட்டுக்குடி உள்ளிட்ட திருக்குவளையை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள், கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. மேலும் திருக்குவளை பகுதி தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன ஊர்வலம் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்ததையொட்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான இடங்களான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூர் மற்றும் குளிக்கரை பகுதி சோகத்தில் மூழ்கியது.

தாயார் மீது நீங்காத அன்பு கொண்ட கருணாநிதி, திருவாரூருக்கு வரும்போது காட்டூரில் உள்ள தனது தாயார் நினைவிடத்துக்கு தவறாமல் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். கருணாநிதி மறைவையொட்டி காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடம் அருகில் திரண்ட மக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

ஆசிரியரின் தேர்வுகள்...