மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை + "||" + Shops in the Villupuram district, bus and autos did not run

விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு;பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
விழுப்புரம், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலையில் மரணமடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

இதேபோல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் மற்றும் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலகங்களிலும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

மேலும் தமிழகத்தில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படவில்லை. அதேபோன்று தனியார் நிறுவனங்களும் இயங்கவில்லை. இதுதவிர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன.

மேலும் கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருத்துவமனைகள், மற்றும் அதன் வளாகத்தில் இருந்த மருந்துக்கடைகள் திறந்திருந்தன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 204 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தன. தியேட்டர்களிலும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் நேற்று முன்தினம் மாலை முதல் அனைத்து அரசு பஸ்களும், தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் நேற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

விழுப்புரம் புதிய பஸ்நிலையம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் என்று முக்கிய நகரங்களில் உள்ள பஸ்நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

அதுமட்டுமின்றி தனியார் பஸ்கள், ஆட்டோ, கார், வேன், லாரிகள் ஆகிய வாகனங்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்குகளிலும் சாலையோரமாகவும், லாரிகள் தேசிய நெடுஞ்சாலையோரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து நிறுத்தம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் இருந்தது.

அரசு, தனியார் பஸ்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் வழக்கம்போல் ரெயில்கள் அனைத்தும் ஓடின. ஆனால் விழுப்புரம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டமின்றி பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன.

இதேபோல் திருக்கோவிலூரிலும் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போது பரபரப்பாக இயங்கும் கடைத்தெரு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்ட் மகேஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

திண்டிவனத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் நேற்று வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாமலே இருந்தது. இதே நிலைதான், மாவட்டத்தில் பிற பகுதிகளான உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், சின்னசேலம், மேல்மலையனூர், அரசூர், விக்கிரவாண்டி, மயிலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், ரிஷிவந்தியம், பிம்மதேசம், மூங்கில்துறைப்பட்டு, கண்டாச்சிமங்கலம் பகுதியிலும் நீடித்தது.

கருணாநிதி மறைவையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.