மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவையொட்டி கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை + "||" + Karunanidhi enclosure shops blocked-buses did not run

கருணாநிதி மறைவையொட்டி கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை

கருணாநிதி மறைவையொட்டி கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சேலம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
சேலம், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது. பெரும்பாலான கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உடனடியாக ஆங்காங்கே மளிகை கடைகள், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தயாராக இருந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் இரவில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியூர் செல்ல இருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று சேலம் மாநகரில் கடைவீதி, செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் ஓட்டல்கள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாகவும், வர்த்தக கேந்திரமாகவும் விளங்கும் செவ்வாய்பேட்டை மற்றும் லீ பஜார் பகுதியில் மொத்த விற்பனை கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், சில கடைகள் முன்பு கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு அஞ்சலி செலுத்தி இருந்ததை காணமுடிந்தது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் சில வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் அவர்கள் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை மெதுவாக தள்ளி கொண்டு சென்றதை காணமுடிந்தது.

சேலத்தில் நேற்று பஸ்கள் ஓடவில்லை. அதாவது, புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 50 சதவீதம் ஆட்டோக்கள் ஓடவில்லை. அஸ்தம்பட்டி, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட மாநகர் முழுவதும் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சேலத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று காலையில் ஓட்டல்கள் ஏதாவது திறக்கப்பட்டிருக்கிறதா? என்று அலைந்தனர். ஆனால் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தால் அவர்கள் உணவு இல்லாமல் பரிதவித்ததை காணமுடிந்தது. கருணாநிதி மறைவையொட்டி புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது தவிர, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் மாநகர் முழுவதும் காரில் சென்று ஏதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கண்காணித்து வந்தனர்.
இதனிடையே, தி.மு.க.தலைவர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் என்பதால் அவரது மறைவையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இதே போல பல்வேறு கிராமங்களில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

இதே போல மேட்டூர், ஓமலூர், இளம்பிள்ளை, தலைவாசல், ஆத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்போக்குவரத்து இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது. ஆட்டையம்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.