மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + Rainfall in Kumari district: flooding in Kumbirai Thamiraparani river

குமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
குழித்துறை,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமை பரவியிருக்கிறது. இதே போல் நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 1, பூதப்பாண்டி- 8.2, களியல்- 8.4, கன்னிமார்- 4, கொட்டாரம்- 4.2, குழித்துறை- 10.2, புத்தன்அணை- 10.4, சுருளோடு- 12.4, தக்கலை- 2.2, குளச்சல்- 18.4, இரணியல்- 3.2, பாலமோர் 10.4, ஆரல்வாய்மொழி- 3, கோழிப்போர்விளை- 5, அடையாமடை- 4, குருந்தன்கோடு- 2, முள்ளங்கினாவிளை- 24, ஆனைகிடங்கு- 2.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதே போல் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 13.6, பெருஞ்சாணி- 9.2, சிற்றார் 1- 14.4, சிற்றார் 2- 12, மாம்பழத்துறையாறு- 5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,459 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 936 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணைக்கு 237 கனஅடி வீதமும், பொய்கை அணைக்கு 4 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 762 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 385 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 268 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் பாதிக்குமேல் நிரம்பி இருக்கிறது. அவற்றுக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. சுசீந்திரம் மற்றும் புத்தேரி குளங்கள் முழுமையாக நிரம்பியது.

தொடர் மழையால், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கடித்த படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தடுப்பணை வழியாக ஆற்றை கடந்து செல்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு பலிகர்ம நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே ஆற்றின் கரை ஓரமாகவே பலி கர்ம நிகழ்ச்சி நடத்தும்படி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்காக வைத்திருக்கும் தடுப்பு கம்பிகளை மறைந்தபடி தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அருவியின் நுழைவு பகுதிகளில் பேனராக வைத்துள்ளனர். இதனால் அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.