மாவட்ட செய்திகள்

முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவதாக பரவிய தகவலால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் குவிந்த பெண்கள் + "||" + The information spread by the Mudra program is spread over the loan In the office of the collector Converged women

முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவதாக பரவிய தகவலால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் குவிந்த பெண்கள்

முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவதாக பரவிய தகவலால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் குவிந்த பெண்கள்
முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவதாக பரவிய தகவலால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 4 ஆயிரம் பெண்கள் மனுக்களுடன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுப்பார்கள். நேற்று வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று காலை 8 மணி அளவிலேயே ஏராளமான பெண்கள் லாரி மற்றும் வேன்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்ப மனுக்களை கையில் வைத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

மனு கொடுக்க வந்தவர்கள் பிரதமரின் முத்ரா திட்டத்தில் மனு கொடுத்தால் உடனடியாக பணம் கிடைக்கும் என்று சிலர் தகவல் தெரிவித்ததால், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்ததாகவும், எனவே கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போவதாகவும் தெரிவித்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் கோட்டாட்சியர் செல்வகுமாரி ஆகியோர், சிவகங்கை தாசில்தார் ராஜா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களை பெற்று வரும்படி தெரிவித்தனர்.

 இதை தொடர்ந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் இந்த தகவலை கூட்டத்தில் தெரிவித்து, மனுவை தாசில்தாரிடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி அங்கு வந்திருந்த பெண்களிடம் தாசில்தார் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அங்கு வந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் உதயா மற்றும் பா.ஜ.க.வினர் மாவட்ட வருவாய் அலுவலர் லதாவை சந்தித்து, மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாரோ வேண்டுமென்றே இதுபோன்று தவறான தகவலை பரப்பியுள்ளனர். எனவே மக்களிடம் மனுக்களை வாங்கக்கூடாது என்றனர். மேலும் இந்த திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கியில் விண்ணப்பித்தால் தகுதியுடையவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

 இதை தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலட்சுமி, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் ராஜா ஆகியோர் கலெக்டர் அலுவலக வாசலில் கூடியிருந்த பெண்களிடம் இந்த திட்டத்தில் கடன் தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று விண்ணப்பத்தை கொடுக்கும்படி தெரிவித்தனர்.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தின் வாசல் முன்பு கூடிநின்று தங்களது மனுவை வாங்க வேண்டும் என்று கூறி, அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த வருவாய் அலுவலர், பெண்களிடம் மனுவை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார். அதன்பின்னர் அதிகாரிகள் வந்து அவர்களது மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மதியம் வரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.