மாவட்ட செய்திகள்

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; எலக்ட்ரீசியன் பலி + "||" + Government bus collision on motorcycle near Karur; Electrician killed

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; எலக்ட்ரீசியன் பலி

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; எலக்ட்ரீசியன் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,

கரூர் அருகேயுள்ள பசுபதிபாளையம் வடக்குதெருவை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன்(வயது 46). எலக்ட்ரீசியனான இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கடைவீதியை நோக்கி வந்து கொண்டிருந்தார். வடக்குதெரு ரெயில்வே கேட் அருகே திருச்சி மெயின்ரோட்டில் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த சுரேஷ்கண்ணனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்யும் விதமாக இருந்தது.

இதற்கிடையே பசுபதிபாளையம் வடக்கு தெரு ரெயில்வே கேட் அருகே திருச்சி மெயின்ரோட்டில் பொதுமக்கள் ஒன்றுகூடி திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் உயிரிழப்பினை ஏற்படுத்தும் வகையிலான விபத்துகள் 5-க்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளது. எனவே இந்த பகுதியில் விபத்தினை தடுக்கும் பொருட்டு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பசுபதிபாளையம் ரெயில்வே வழித்தடத்திற்கு கீழ்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குகை வழிப்பாதை பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் தொடர்ந்ததால் அப்பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதற்கிடையே பசுபதிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சின் டிரைவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...